"சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" - இயேசு

Sunday, 22 June 2014

சவுல் மற்றும் அவரது குமாரர்கள் மரணம் குறித்து பைபிள் முரண்படுகிறதா?

சவுல் இஸ்ரவேலை அரசாண்ட இறுதி காலத்தில், இஸ்ரவேலர்களுக்கும் பெலிஸ்தருக்கும் நடைபெற்ற போரில் இஸ்ரவேலர் படுதோல்வி அடைந்தனர், இஸ்ரவேலை வழி நடத்திய சவுலும், அவர் மகன் யோனத்தானும் போர்க்களத்தில் இறந்தார்கள். சவுலின் மரணத்தைக் குறித்து பைபிளின் இரண்டு இடங்களில் செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் முரண்பாடு உள்ளது என்று வேத ஞானமில்லாத சிலர் புலம்பி வருவதால் அவர்கள் அறியாமையை எடுத்துக் காட்டும் வண்ணம் கீழே அதற்கான அதில் பதிக்கப்பட்டுள்ளது.

1) சவுலின் மரணம்:


சவுலின் மரணத்தைக் குறித்து பைபிள் கூறும் முதல் செய்தியைக் கீழ்க்கண்ட வசனங்களில் காணலாம்,

1 சாமுவேல் 31:3,4,5 - சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்த சேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப் போட்டு, என்னை அவமானப் படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப் போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்ய மாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின் மேல் விழுந்தான். சவுல் செத்துப் போனதை அவன் ஆயுததாரி கண்ட போது, அவனும் தன் பட்டயத்தின் மேல் விழுந்து, அவனோடே கூடச் செத்துப் போனான்.

சவுலின் மரணத்தின் போது, மேற்கண்ட வேதப்பகுதியில் உள்ள சம்பவங்கள் தான் உண்மையில் நடந்தது. ஆனால் இப்பொழுது சவுல் இறந்த செய்தியைச் சொல்ல அமலேக்கியன் ஒருவன் தாவீதிடம் வருகிறான், அவன் என்ன சொல்கிறான் என கீழே காணவும்,

2 சாமுவேல்:1 17 - சவுல் மரித்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறிய அடித்து, சிக்லாகுக்குத் திரும்பி வந்து, இரண்டுநாள் அங்கே இருந்த பிற்பாடு, மூன்றாம் நாளிலே ஒரு மனுஷன் சவுலின் பாளயத்திலிருந்து புறப்பட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, தன் தலையின் மேல் புழுதியைப் போட்டுக் கொண்டு, தாவீதின் இடத்தில் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான். தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு அவன்: இஸ்ரவேலின் பாளயத்தில் இருந்து தப்பி வந்தேன் என்றான். தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: ஜனங்கள் யுத்தத்தை விட்டு முறிந்தோடிப் போனார்கள்; ஜனங்களில் அநேகம் பேர் விழுந்து மடிந்து போனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள் என்றான். சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்து போனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவிக்கிற வாலிபனிடத்தில் கேட்டதற்கு, அந்த வாலிபன் நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின் மேல் சாய்ந்து கொண்டு இருந்தார்; இரதங்களும் குதிரை வீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள். அவர் திரும்பிப் பார்த்து, என்னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன், அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன். அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று என்னைக் கொன்று போடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாய் இருக்கிறது என்றார். அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்டையில் போய் நின்று அவரைக் கொன்று போட்டேன்; பிற்பாடு அவர் தலையின் மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக் கொண்டு அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக் கொண்டு வந்தேன் என்றான். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல மனுஷரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, சவுலும் அவன் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்கால மட்டும் உபவாசமாய் இருந்தார்கள். தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய ஜாதியானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான். தாவீது அவனை நோக்கி: கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரைக் கொன்று போடும்படி நீ உன் கையை நீட்டப் பயப்படாமற் போனது என்ன என்று சொல்லி, வாலிபரில் ஒருவனைக் கூப்பிட்டு: நீ கிட்டப்போய் அவன் மேல் விழுந்து அவனை வெட்டு என்றான்; அவன் அவனை வெட்டினான்; அவன் செத்தான். தாவீது அவனைப் பார்த்து: உன் இரத்தப்பழி உன் தலையின் மேல் இருப்பதாக; கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரை நான் கொன்று போட்டேன் என்று உன் வாயே உனக்கு விரோதமான சாட்சி சொல்லிற்று என்றான். தாவீது சவுலின் பேரிலும் அவன் குமாரனாகிய யோனத்தானின் பேரிலும் புலம்பல் பாடினான்.

விளக்கம்:


அந்நியர்கள் கையில் இறப்பதை அவமானமாக எண்ணிய சவுல் தன் ஆயுததாரியை நோக்கி தன்னை கொல்லுமாறு கேட்டார். அவன் அதற்கு மறுத்த‌ போது, சவுலே தன்னைக் குத்திக் கொண்டு இறந்தார் எனவும், அவர் இறந்ததைக் கண்ட உடனிருந்த ஆயுததாரியும் தன்னைக் குத்திக் கொண்டு இறந்தான் என பைபிள் தெள்ள தெளிவாகச் சொல்கிறது. எனவே, தாவீதிடம் சவுல் இறந்ததைக் குறித்து தூது சொல்ல வந்த அமலேக்கியன் பொய் சொல்கிறான் என்பதில் சந்தேகமில்லை. சவுல் அந்நியர் கையில் இறப்பதை அவமானமாக எண்ணும் போது எதற்காக ஒரு அமலேக்கியனை நோக்கி தன்னைக் கொல்லுமாறு சொல்ல வேண்டும்? அமலேக்கியன் கூறிய தூதுச் செய்தி பொய்.

சவுலுக்கு பிறகு இஸ்ரவேலின் ஆட்சி அதிகாரம் தாவீதிடம் வந்து சேரும் என ஏற்கனவே கர்த்தர் சாமுவேல் தீர்க்கதரிசியைக் கொண்டு வாக்குரைத்திருந்தார். இது சவுலிற்கு நன்றாகத் தெரியும். எனவே, எப்படியாவது தனக்கு பின் தன் மகனான யோனத்தானிற்கு ஆட்சிபீடம் கிடைக்க வேண்டும் என்று தன் வாழ்நாள் எல்லாம் சவுல் தாவீதை கொலை செய்ய முயன்று கொண்டே இருந்தார்.

இச்சம்பவம் நடந்த காலக்கட்டத்திலேயே தாவீது அமலேக்கியருடன் போரிட்டு அவர்களை வீழ்த்தி இருந்தார், அதில் உயிர் தப்பிய ஒரு அமலேக்கியன் தான் நல்லவன் போல வேஷம் போட்டுக் கொண்டு வந்தவன்.

சவுல் இறந்ததை தாவீதிடம் கூறினால் தாவீது சந்தோசப்படுவார், தானே சவுலைக் கொன்றதாகச் சொன்னால் தனக்கு வெகுமதி அளிப்பார் என‌ எண்ணி தூது சொல்ல வந்தான், தாவீதைப் பிரியப்படுத்த வரும் போது கூடவே சவுலின் ராஜ கீரிடத்தையும் எடுத்துக் கொண்டு வந்தான். ஆனால் சவுல் தாவீதை எதிரியாக எண்ணினானும், தாவீதும் சவுலின் மகனான யோனத்தானும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். எனவே சவுலும் யோனத்தானும் இறந்து போனார்கள் என அறிந்த போது தாவீது வருந்தினார். "சவுலைக் கொன்றது நான் தான்" என அந்த அமலேக்கியன் பொய் சொன்னதும் அதனை தாவீது நம்பிவிட்டார், அதனால் அவருக்கு கடுங்கோபம் எழுந்து, தூதுவனைக் கொல்ல சொல்லி உத்தரவிட்டார், அமலேக்கியன் சொன்ன பொய்யே அவனுக்கு கேடு விளைவித்தது.

எனவே சவுலின் மரணத்தில் முரண்பாடு உள்ளது என மறுப்பாளர்கள் கூக்குரலிடும் முன் தங்கள் காமன்சென்ஸை கொஞ்சம் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இனி, சவுலின் பிற மகன்கள் எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள் என காணலாம்...

2) சவுல் சந்ததியாரின் அழிவு:
தாவீது அரசாண்ட காலத்தில் நாட்டில் பஞ்சம் நேர்ந்தது, அப்போது கர்த்தர் சவுலும் அவன் வீட்டாரும் செய்த துற்கிரியைகளின் காரணமாகவே நாடு வறட்சியில் தவிப்பதாக கூறினார். சவுல் அரசாண்ட காலத்தில் கிபியோனியர் என்ற இனத்தவர்களை படுகொலை செய்திருந்தார். எனவே தாவீது கிபியோனியர் சிலரை அழைத்து வழக்கை விசாரித்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு கைம்மாறாகத் தான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள் என கேட்டார். அவர்கள் சவுலின் வாரிசுகள் ஏழு பேரை கொலை செய்ய வேண்டும் என தாவீதைக் கேட்டனர், அவர்கள் விரும்பியவாறே சவுலின் வாரிசுகள் ஏழு பேர் கொலை செய்யப்பட்டனர், அதன் பின்பு கர்த்தர் இஸ்ரவேலர்களின் வேண்டுதலைக் கேட்டார் என பைபிள் சொல்கிறது.

சவுல் செய்த பாவங்களுக்கு ஏன் சவுலின் வாரிசுகள் இறக்க வேண்டும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அவர்க‌ளுக்குக் கொடுத்த தண்டனை பைபிளோடு முரண்படுகிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டு, அதற்காக ஒரு வசனத்தையும் எடுத்துக்காட்டுகிறார்கள். அதனைக் கீழே காணலாம்,

உபாகமம் 24:16 - பிள்ளைகளுக்காக பிதாக்களும், பிதாக்களுக்காக பிள்ளைகளும் கொலை செய்யப்பட வேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்பட வேண்டும்.

விளக்கம்:
மறுப்பாளர்களுக்கு வேத அறிவில்லை என்பதற்கு இது இன்னொரு சான்று. மேலுள்ள வசனம் மட்டும் போதாது, கீழுள்ள வசனத்தையும் காணவும்...

எசேக்கியல் 18:19 - இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.

மேற்கண்ட வசனப்படி, தகப்பன் செய்த பாவத்திற்காக அவன் மகனை தண்டிக்கக் கூடாது என்றால், அவன் மகன் முதலில் நல்லவனாக இருக்க வேண்டும். துன்மார்க்கனின் வாரிசுகள் நல்லவர்களாய் இருந்தால் தான் உபாகமம் 24:16 பொருந்தும். ஆனால், சவுலின் குமாரர்கள் உத்தமர்கள் அல்ல. அவர்கள் பல தீமைகளைச் செய்தவர்களே, அவர்கள் நல்லவர்களாய் இருந்திருந்தால் அல்லது தங்கள் பாவத்தை விட்டு மனம் திரும்பியிருந்தால் அவர்களை விட்டுவைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சவுலின் சந்ததி எப்படிப்பட்டவர்கள் என்பதை கீழுள்ள வசனம் கூறுகிறது.

2 சாமுவேல் 21:1 - தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்; கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.

சவுலின் குமாரர்கள் கொல்லப்பட்டதில் தவறில்லை. ஆனால் அவர்களில் யோனத்தான் நல்லவராக இருந்தார், அவருக்கு மேற்கண்ட உபாகமம் 24:16 பொருந்தும், எனவே, யோனத்தானின் வாரிசுகள் மட்டும் உயிரோடு காப்பாற்றப்பட்டனர் என பைபிள் சொல்கிறது.

சவுலின் மரணத்திலும், அவர் குமாரரின் மரணத்திலும் முரண்பாடு இல்லை, விளக்கம் அறியாமல் பிற நம்பிக்கைகளை இகழ்ந்து வருவோரின் மூளைகளில் தான் முரண்பாடு உள்ளது.

Wednesday, 18 June 2014

உயிர்த்தெழுதல் முதல் விண்ணேறுதல் வரை - கால அட்டவணை

உயிர்த்தெழுதல் நாளில் இருந்து கர்த்தர் பரலோகத்திற்கு எழுந்தருளிய தினம் வரை நடந்த சம்பவங்கள் எல்லாம் கீழே சொல்லப்பட்டுள்ளது, நான்கு சுவிசேசங்களையும் ஆராய்ந்தால் நமக்குக் கிடைக்கின்ற தெளிவான கால அட்டவணை இதுவே. இந்த அட்டவணையை உருவாக்க ஒருமுறைக்கு பலமுறை சுவிசேசங்களை ஆராய்ந்துவிட்டேன் (அதனை இங்கு காணலாம்), அதன் முடிவுகளே இப்பதிவில் பதிக்கப்பட்டுள்ளது. நன்றி, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

உயிர்த்தெழுதலுக்கு முன்பு


கர்த்தரின் தூதன் இறங்கி கல்லறையின் கல்லை அகற்றி அதன் மேல் அமர்ந்தான், அவனைக் கண்டு பயந்த காவல் சேவகர்கள், அவ்விடம் விட்டு ஓடினர்.

வாரத்தின் முதல் நாள் அதிகாலை வேளை

1) மகதலேனா மரியாள், கிலெயோப்பா மரியாள், யோவன்னாள், சலோமே, மற்ற பெண்கள் இயேசுவின் கல்லறைக்குச் செல்கின்றனர்.

2) அங்கு சென்றதும் கல்லறையின் கல் புரட்டப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள்.

3) கர்த்தரின் சரீரத்தை யாரோ திருடி விட்டார்கள் என எண்ணிய மகதலேனா மரியாள் உடனே அவ்விடம் விட்டு பேதுருவுக்குத் தகவல் சொல்ல ஓடிவிட்டாள். பேதுருவையும் யோவானையும் சந்தித்து கல்லறையின் கல் புரட்டப்பட்டிருப்பதைச் சொல்லி அழைத்து வருகிறாள்.

4) மற்ற ஸ்தீரிகளோ கல்லறைக்குள் பிரவேசித்து இரு தூதர்களைக் கண்டார்கள். அவர்கள் மூலம் "இயேசு உயிர்த்தெழுந்தார்" என அறிந்து பிற அப்போஸ்தலருக்குச் சொல்ல அவ்விடம் விட்டு விரைந்தனர்.

5) அவர்கள் போன சில நேரத்திற்குள், மகதலேனா மரியாளும், யோவானும், பேதுருவும் கல்லறைக்கு வந்து கர்த்தரின் சரீரம் அங்கு இல்லாமல், சீலைகள் மட்டும் இருப்பதைக் கண்டு வியந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் "இயேசு உயிர்த்தெழுந்தார்" என உணரவில்லை. எனவே, அவ்விடம் விட்டு தங்கள் இருப்பிடத்திற்கு இருவரும் திரும்பினர்.

6) கல்லறைக்கு வெளியே அழுது கொண்டு நின்றிருந்த மகதலேனா மரியாள், கல்லறைக்குள் பிரவேசித்து ஸ்தீரிகளுக்கு காட்சி அளித்த அதே தூதர்களைக் கண்டான். அப்பொழுது இயேசு தாமே அவளுக்கு காட்சியளித்து தன் உயிர்த்தெழுதலைப் பிறருக்குத் தெரிவிக்கச் சொல்லி அவளை அங்கிருந்து அனுப்பினார். (தரிசனம் 1)

7) பிற அப்போஸ்தலர்களைக் காண ஓடிக் கொண்டிருந்த மற்ற ஸ்தீரிகளையும் வழியிலே இயேசு சந்தித்து ஆசீர்வதித்தார். அவர்கள் கர்த்தரைப் பணிந்து கொண்டு, சந்தோசத்தோடே பிற அப்போஸ்தலரைக் காண சென்றார்கள். (தரிசனம் 2)

உயிர்த்தெழுதல் நாள் காலை நேரம்

1) ஸ்தீரிகளால் அப்போஸ்தலருக்கு செய்தி அறிவிக்கப்படுகிறது. இதனால் அங்கு குழப்பங்கள் நிகழ்கின்றன. பிற அப்போஸ்தலர்களோடு தங்கியிருந்த இரண்டு அப்போஸ்தலர் அல்லாத சீஷர்கள் இவைகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டு எம்மாவுக்குப் புரப்பட்டனர்.

2) சீமோன் பேதுருவும் யோவானும் தங்கியிருந்த இடத்தில் மூன்றாம் காட்சி நிகழ்கிறது. இயேசு பேதுருவுக்கு காட்சியளிக்கிறார். (தரிசனம் 3)

உயிர்த்தெழுதல் நாள் மாலை நேரம்

1) எம்மாவுக்குச் சென்ற இரண்டு அப்போஸ்தலர் அல்லாத சீஷர்களையும் இயேசு சந்திக்கிறார், அப்பம் பிட்கையில் அவர் இயேசு என அறிந்து உயிர்த்தெழுதல் செய்தியைச் சொல்ல அவர்கள் எருசலேமுக்கு விரைகின்றனர். (தரிசனம் 4)

2) ஸ்தீரிகள் சொல்லிய‌ செய்திகளால் வியந்த அப்போஸ்தலர்கள் எல்லாம் ஒரே இடத்தில் ஒன்று கூடினார்கள். பேதுருவுக்கும் இயேசு தரிசனமானார் என அறிந்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இதனைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் எம்மாவுக்குச் சென்ற சீஷர்களும் வந்து அவர்களை ஆச்சரியப்படுத்தினர். இக்கூட்டம் நிகழ்ந்த போது அப்போஸ்தலர்களில் ஒருவரான தோமா மட்டும் அங்கு இல்லை.

3) அவ்வேளையில் இயேசு அங்கே தரிசனமாகி "உங்களுக்குச் சமாதானம்" என்றார். ஒரு ஆவியைக் காண்கிறதை அவர்கள் பயப்பட்ட போது இயேசு அவர்களைத் தேற்றி சந்தோசப்படுத்தினார். அவர்களோடு உணவு உண்ட பின் அவ்விடம் விட்டு கர்த்தர் அகன்றார். (தரிசனம் 5)

உயிர்த்தெழுதல் முடிந்து எட்டு நாளைக்குப் பின்பு

1) அப்போஸ்தலருக்கு இயேசு காட்சியளித்த போது தோமா இல்லாததால் அவர் உயிர்த்தெழுதலை நம்பவில்லை. பிறர் எவ்வளவு கூறியும் தோமா ஏற்கவில்லை, எனவே உயிர்த்தெழுதல் முடிந்து எட்டு நாளைக்குப் பின்பு அப்போஸ்தலர்கள் எல்லாம் கூடியிருக்கும் போது இயேசு தரிசனமானார், கர்த்தரைக் கண்ட தோமா "என் ஆண்டவரே! என் தேவனே" என வியந்து அழைக்கிறார். (தரிசனம் 6)

உயிர்த்தெழுதல் முடிந்து பத்து நாளைக்குப் பின்பு

1) கர்த்தரின் சொற்படி அப்போஸ்தலர்கள் எல்லாம் கலிலேயாவிற்கு கிளம்பினர், எருசலேமில் இருந்து கலிலேயாவிற்கு கால்நடையாக‌ செல்ல குறைந்தது இரண்டு நாட்கள் தேவை. எனவே, அவர்கள் அங்கு அடைந்ததும் பேதுருவோடு சிலர் மீன் பிடிக்கிறதற்காக திபேரியா கடற்கரைக்குச் சென்றனர். அவர்கள் நாள் முழுவதும் போராடியும் மீன்கள் கிடைக்கவில்லை.

2) அடுத்த நாள் பொழுது விடிந்த பின்பு, இயேசு அவர்களுக்குத் தரிசனமானார். அவர்கள் வலை நிறைய மீன்களை பிடித்து இயேசுவோடு கடற்கரையில் அமர்ந்து உணவு உண்டனர். இயேசு பேதுருவை நோக்கி "என்னை நேசிக்கிறாயா" என மும்முறைக் கேட்கிறார், அவர் ஒத்துக் கொள்ள இயேசு தன் ஜனங்களை வழிநடத்தும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார். (தரிசனம் 7)

3) இதன் பின்பு, இயேசு முன் குறித்த கலிலேயாவில் உள்ள ஒரு மலையில் அவரது தரிசனம் நிகழ்கிறது. அப்போஸ்தலர்களோடு அவரது உறவின‌ர், சகோதரர் என ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருக்க இயேசு காட்சியளித்தார். (தரிசனம் 8)

4) கர்த்தரின் சகோதரனான யாக்கோபுக்கு இயேசு தரிசனமாகிறார். (தரிசனம் 9)

அவரது சகோதரர்கள், அப்போஸ்தலர்கள், அப்போஸ்தலர் அல்லாத சீஷர்கள் எல்லாம் அவர் மேல் நம்பிக்கையுள்ளவர்கள் ஆனார்கள். அவர்களுக்கு பல முறை இயேசு காட்சியளிக்க நேர்கிறது, அனைவரும் மிக சந்தோசமாக அந்த நாட்களைக் கழித்தனர். பின்பு இயேசு உலகை விட்டு விடைபெறும் நேரம் வருகிறது.

உயிர்த்தெழுதல் முடிந்து நாற்பதாம் நாள் (இறுதி காட்சி)

இயேசு, அவரது சகோதரர்கள், அவரது தாயாராகிய மரியாள், உறவினர்கள், அப்போஸ்தலர்கள், அப்போஸ்தலர் அல்லாத சீஷர்கள், அவரோடு ஊழியம் செய்து வந்த ஸ்தீரிகள் எல்லாம் எருசலேமிற்கு வந்து சேர்ந்தனர். அங்கே அவர்களோடு இறுதி வார்த்தைகள் சிலவற்றைக் கூறிய‌ இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்றார். அங்கே அவர்கள் ஒலிவ மலையின் மேல் ஏறினார்கள். பரிசுத்த ஆவியானவரின் பெலத்தால் தரிப்பிக்கப்படும் வரை எருசலேமை விட்டு யாரும் செல்ல வேண்டாம் என இயேசு கூறினார், பின்பு எல்லாரிடமும் விடைபெற்று பரலோகத்திற்கு எழுந்தருளினார். அவர்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு மேகம் அவர்கள் கண்களுக்கு மறைவாக அவரை எடுத்துக் கொண்டது. கர்த்தர் தங்களித்த கடமையைச் செய்ய அவர்கள் எருசலேமிற்கு திரும்பிச் சென்று ஒரு மனப்பட்டு ஜெபத்தில் தரித்திருந்தார்கள்.

ஆமென்.

இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து சுவிசேசங்கள் முரண்படுகின்றனவா? - ஒரு தெளிவான ஆய்வு

இக்கேள்வியை மறுப்பாளர் யாரிடமாவது கேட்டால் "நிச்சயமாக முரண்படுகின்றன" என்பார்கள். ஆனால் நாம் பைபிளில் உயிர்த்தெழுதல் குறித்துக் காணப்படும் செய்திகளை உண்மையாக, தீர்க்கமாக ஆராய்ந்தால் "முரண்பாடே இல்லை, அத்தனை சுவிசேசங்களும் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து ஒத்த‌ செய்திகளைத் தான் கொடுக்கின்றன" என நிச்சயமாக கூறுவோம்.

நம்ப முடியவில்லையா? இக்கட்டுரையை தொடர்ந்து வாசியுங்கள்.

உயிர்த்தெழுதலுக்கு பின்பு இயேசு அளித்த காட்சிகள் எல்லாம் 6 புதிய ஏற்பாட்டு நூல்களில் விவரமாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

1) மத்தேயு சுவிசேசம் 28ஆம் அதிகாரம்
2) மாற்கு சுவிசேசம் 16ஆம் அதிகாரம்
3) லூக்கா சுவிசேசம் 24ஆம் அதிகாரம்
4) யோவான் சுவிசேசம் 20,21ஆம் ஆதிகாரங்கள்
5) அப்போஸ்தலர் நடபடிகள் 1ஆம் அதிகாரம்
6) 1 கொரிந்தியர் 15ஆம் ஆதிகாரம்

இவைகளை வைத்து திட்டமாக ஆராய்ந்ததில் உயிர்த்தெழுதல் தினத்திலிருந்து கர்த்தர் பரலோகத்திற்கு எழுந்தருளி போன வரைக்கும் நடைபெற்ற சம்பவங்கள் தெளிவாக புரிந்தன. அவைகளை இங்கு சமர்ப்பிக்கிறேன். படித்து பாருங்கள், உயிர்த்தெழுதல் குறித்து சுவிசேசங்கள் முரண்படவில்லை என்பது நன்றாக விளங்கும். அதோடு உயிர்த்தெழுதலுக்கு முன்பு நடந்த சில சங்கதிகளையும் தெரிந்திருப்பது அவசியம். எனவே அவற்றைக் குறித்து முதலில் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

உயிர்த்தெழுதலுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவங்களின் சுருக்கம்:

இயேசு கிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் கைது செய்யப்பட்ட போது, அப்போஸ்தலர்கள் எல்லாம் அவரை விட்டு ஓடிப் போனார்கள். இருப்பினும் அதில் இருவர் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அவர்கள் பேதுரு மற்றும் இயேசுவின் அன்புக்குரிய‌ யோவான். பேதுருவுக்கு பின்தொடர தைரியமிருந்தாலும் அங்கு தனக்கு ஏற்பட்ட சோதனைகளை சந்திக்க தைரியமில்லை, இயேசு விசாரணைக்கு நின்ற வேளையில் "நீ அந்த கலிலேயனின் ஒரு சீஷன் தானே" என சிலர் பேதுருவைக் கேட்கின்ற‌னர், ஒத்துக் கொண்டால் தன்னையும் கொலை செய்வார்கள் என பயந்த பேதுரு கர்த்தரை மறுதலித்துவிட்டார். பின்பு மன வேதனை தாங்க முடியாமல் அவர் அவ்விடம்விட்டு சென்றுவிடுகிறார். இதற்கு பின்பு இயேசுவை பின்தொடர்ந்த சீஷன் யோவான் மட்டும் தான். இயேசு கிறிஸ்து உயிர்த்துறக்கும் வரை யோவான் அருகிலிருந்தார். எனவே, இயேசு தன் தாயாரை யோவானிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் நீத்தார்.


யூதர்களின் வழக்கப்படி ஒரு நாளின் துவக்கம் காலையில் அல்ல, மாலையிலேயே. இயேசு உயிர் நீத்த வேளையில் மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மாலை ஆரம்பித்துவிட்டால் யூதர்களுக்கான ஓய்வு நாள். ஓய்வு நாளில் வேலை செய்யக்கூடாது என மோசேயின் நியாப்பிரமாணத்தில் எழுதப்பட்டிருப்பது நாம் அறிந்ததே. எனவே அவசர அவசரமாக அவரது உடலை இறக்கி, திரவியங்கள் பூசி, சீலையில் பொதிந்து, அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புக்குச் சொந்தமான ஒரு புதுக் கல்லறையில் வைத்துவிட்டார்கள். கல்லறை ஒரு பெருங்கல்லால் மூடப்பட்டது. அதன் பின்பு சனிக்கிழமைக்கான வேத விதிப்படி யூதர்கள் எல்லாம் ஓய்ந்திருக்க தங்கள் இல்லத்திற்கு சென்றுவிட்டார்கள். இவ்வாறு ஒய்வு நாள் நெருங்கிய காரணத்தினால், அரைகுறையான இறுதிச் சடங்குகளோடு இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்தார். (உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன் என்றவருக்கு வந்த நிலையைப் பாருங்கள்!) எனவே அவரோடு ஊழியம் செய்துவந்த, அவரது அன்பை பெற்ற சில பெண்களுக்கு அந்த நாள் முழுவதும் மனமே இல்லை, எப்பொழுது ஓய்வு நாள் முடியும் கல்லறைக்குச் சென்று இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்யலாம் என காத்துக் கிடந்தனர். சனிக்கிழமை மாலையோடு முடிவுபெற்று ஓய்வுக்கான நேரம் முடிந்தது. உடனே அவர்கள் எல்லாரும் கர்த்தரின் கல்லறைக்குக் கிளம்பத் தயாராகி விட்டார்கள்.

இதன் பின்பு உயிர்த்தெழுதல் நிகழ்கிறது, உயிர்த்தெழுதல் குறித்து சுவிசேசங்கள் கூறுகின்ற செய்திகளில் முரண்பாடுகள் உள்ளன என மறுப்பாளர்கள் சொல்கின்ற அத்தனை குற்றச்சாட்டுகளும் தவறானவை என்பது கீழே படித்தால் உங்களுக்கே புரியும்.

உயிர்த்தெழுந்தல் தினம் முதல் பரலோகத்துக்கு கர்த்தர் எழுந்தருளிய தினம் வரை:

1) கல்லறைக்குப் புறப்பட்ட பெண்கள் பற்றி:

மத்தேயு = மகதலேனா மரியாள், மற்ற மரியாள்
மாற்கு = மகதலேனா மரியாள், கிலெயோப்பா மரியாள், சலோமே
லூக்கா = மகதலேனா மரியாள், கிலெயோப்பா மரியாள், யோவன்னாள், பிறர்
யோவான் = மகதலேனா மரியாள்

மேலே கல்லறைக்குப் புறப்பட்ட பெண்கள் குறித்து நான்கு சுவிசேசங்களும் வேறுபடுவதைக் காணலாம். இது ஒரு முரண்பாடா? இல்லை. ஏனெனில் நான்கு சுவிசேச ஆசிரியர்களும் தங்களுக்கு குறிப்பிடத் தோன்றிய பெண்களை மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள். எந்த சுவிசேச ஆசிரியரும் கல்லறையைக் காணச் சென்ற பெண்கள் நான் கூறுபவர்கள் மட்டுமே வேறு நபர்கள் இல்லை என கூறவில்லை.

உதாரணத்திற்கு யோவான் சுவிசேசம் மகதலேனா மரியாளை மட்டும் குறிப்பிடுவது போல இருந்தாலும், அதே நூலில் இன்னும் சில பெண்களும் கூட சென்றனர் என்பதற்கான அடையாளங்கள் மறைமுகமாக உள்ளன. கீழே அந்த வசனத்தைக் காணலாம்.

யோவான் 20:2 - உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.

மகதலேனா மரியாள் பேதுருவினிடத்தில் செய்தியைச் சொல்லும் போது, "எங்களுக்குத் தெரியவில்லை" என்கிறாள். நிச்சயமாக அவளுடனே பிற பெண்களும் சென்றிருக்கிறார்கள் என்பதை யோவான் சுவிசேசம் மறைமுகமாகச் சொல்கிறது. ஆனால் யோவான் பெயரிட்டு குறித்த பெண் மகதலேனா மரியாள் மட்டுமே. எனவே மேற்கண்ட வேறுபாடு ஒரு முரண்பாடே அல்ல. லாஜிக்கோடு சிந்திப்பவர்களுக்கு புரியும்.

2) எதற்காக சென்றார்கள்?

மத்தேயு: காரணம் சொல்லப்படவில்லை
மாற்கு: இயேசுவின் உடலுக்கு சுகந்தவர்க்கமிட
லூக்கா: இயேசுவின் உடலுக்கு சுகந்தவர்க்கமிட
யோவான்: காரணம் சொல்லப்படவில்லை

இவ்விஷயமும் ஒரு முரண்பாடு இல்லை. ஏனெனில் மத்தேயுவும் யோவானும் அப்பெண்கள் வாசனை திரவியங்களோடு வந்ததாகச் சொல்லவில்லை என்றாலும் அவர்கள் வாசனைத் திரவியங்களோடு சென்றார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் மாற்குவிற்கும், லூக்காவிற்கும் தங்கள் நூல்களை எழுதும் போது இவ்விசயத்தைச் சொல்ல வேண்டும் என தோன்றியுள்ளது, எனவே கூடுதல் தகவலோடு எழுதியிருக்கிறார்கள்.

3) எந்நேரத்தில் சென்றார்கள்?

மத்தேயு: வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில்
மாற்கு: வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிற போது
லூக்கா: வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே
யோவான்: வாரத்தின் முதல் நாள் காலையில் அதிக இருட்டோடே

நேரம் குறித்த தகவல் நான்கு சுவிசேசங்களிலும் ஒத்துப் போகின்றது. யோவான் சுவிசேசம் "அதிக இருட்டோடே" என சொல்வது பிரட்சனையல்ல, ஏனெனில் "காலையில் அதிக இருட்டு" என சொல்லும் போது விடியற்காலை என்ற பொருள் வருவதை அறியலாம். எனவே, மேற்கண்ட தகவல்படி, பெண்கள் காலை 4 மணியளவில் சென்றிருக்கலாம். மேலே நாம் கண்ட முன்கதைச் சுருக்கத்தில், ஓய்வு நாள் முடிந்ததும் (சனிக்கிழமை மாலைக்குப் பின்பு) அவர்கள் கல்லறைக்கு கிளம்பத் தயாராய் இருந்திருந்தார்கள் என கண்டோம், ஏன் அவர்கள் வந்து சேர காலை நான்கு மணி வரை ஆனது என சிந்தித்தீர்களா?

ஏனெனில் சுவிசேசங்கள் தருகின்ற குறிப்புப்படி ஐந்து பெண்கள் அல்லது அதற்கு மேலே கல்லறைக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் மகதலேனா ம‌ரியாள், யோவன்னாள், சலோமே, யாக்கோபுக்குத் தாயான மரியாள், மற்ற பெண்/பெண்கள். இவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் இருந்து ஒன்று கூடி கல்லறைக்குப் புரப்பட்டு வர வேண்டும். உதாரணத்திற்கு, யோவன்னாள் ஏரோதின் காரிய‌க்காரனின் மனைவி, அவள் அரண்மனையில் இருந்து வர வேண்டும், மற்ற பெண்கள் எங்கு இருந்தார்களோ தெரியவில்லை. எனவே இவர்கள் எல்லாம் ஒன்று கூட சிறிது நேரம் எடுத்து இரவாயிருக்கும், கல்லறையும் அவர்கள் ஒன்று கூடிய இடத்தில் இருந்து சற்று தள்ளி அமைந்துள்ளதால் இவர்கள் அப்பொழுது புறப்பட்டால் அந்த இடத்தை அடைவதற்குள் நள்ளிரவு ஆகிவிடும், அதனால் பாதுகாப்பு கருதி கொஞ்சம் பொறுத்திருந்து, அதிகாலையிலே சீக்கிரமாக வருகிறார்கள்.

4) கல்லறையின் கல் புர‌ட்டப்படுதல்:

கல்லறைக்குப் புறப்பட்டு வந்துக் கொண்டிருக்கும் போது நமக்காக கல்லை யார் புரட்டுவார்கள் என அப்பெண்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் அவர்கள் வந்து சேர்ந்த போது ஏற்கனவே கல் புர‌ட்டப்பட்டு இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள் என மாற்கு, லூக்கா, யோவான் சுவிசேசங்கள் கூறுகின்றன. ஆனால் மத்தேயு சில வித்தியாசங்களோடு கூறுகிறது. அதனைக் காணலாம்.

மத்தேயு 28:1-4 - ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்தில் இருந்து இறங்கி வந்து, வாசலில் இருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போல வெண்மையாகவும் இருந்தது. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.

ஸ்தீரிகள் வந்த பின்பு தான் ஒரு தூதன் இறங்கி கல்லைப் புர‌ட்டினான் என மத்தேயு சொல்வதாகவும், ஆனால் பிற சுவிசேசங்கள் அவர்கள் வந்த போது ஏற்கனவே கல் புர‌ட்டப்பட்டிருந்தது என சொல்வதாகவும் சிலர் கூறுகின்றனர். எனவே இது ஒரு முரண்பாடு என்பது அவர்கள் கருத்து.

உண்மையில் இது முரண்பாடு அல்ல. கல்லறையின் கல் புர‌ட்டப்பட்ட பின்பு தான் இயேசு கிறிஸ்து அதில் இருந்து வெளியே வருவார் என்பதை மறுப்பாளர்கள் சிந்திக்க மறந்துவிட்டார்கள். பெண்கள் வருவதற்கு முன்பே இயேசு கல்லறையை விட்டுச் சென்றுவிட்டதாக மத்தேயு சுவிசேசம் சொல்கிறது (மத்தேயு 28:5,6). எனவே அவர்கள் வழியில் வந்துக் கொண்டிருக்கும் போதே தூதன் இறங்கி கல்லைப் புர‌ட்டிவிட்டான் என்பதிலும், காவலாளிகள் ஓடிவிட்டனர் என்பதிலும், இயேசு வெளியே சென்றுவிட்டார் என்பதிலும் சந்தேகமில்லை. அதனால் மத்தேயு சுவிசேசமும் அவர்கள் வந்து சேரும் முன்பே கல் புர‌ட்டப்பட்டிருந்ததாகத் தான் சொல்கின்றது என்பதை அறியலாம்.

ஸ்தீரிகள் வந்து சேரும் முன்பே தூதன் இறங்கி, கல்லை புரட்டி, சேவகர்களை விரட்டிவிட்டு கல்லின் மீது அமர்ந்துக் கொண்டான் என்றால் இந்த விஷயங்கள் எல்லாம் யார் மூலம் ஆசிரியருக்கு தெரியவந்தது என நீங்கள் கேட்கலாம். பயந்து ஓடிய சேவகர்கள் இந்த செய்திகளை எல்லாம் யூத ஆசாரியர்களுக்குச் சொன்னார்கள் எனவும், அவர்கள் பணத்தைக் கொடுத்து இயேசுவின் உடலைச் அவரது ஆட்கள் திருடிவிட்டதாகச் சொல்லுமாறு சொன்னதாகவும் மத்தேயு நற்செய்தியாளர் கூறுகிறார். யூத ஆசாரியர்களுக்கு உள்ளேயே நிக்கோதெமு, அரிமத்தியா யோசேப்பு போன்ற இரகசிய‌ கிறிஸ்தவ விசுவாசிகள் இருந்தனர். எனவே, இந்த செய்திகள் எல்லாம் மக்களிடையே கசிந்திருக்கின்றன என்பதில் வியப்பில்லை.

5) மகதலேனா மரியாள் பேதுருவை நோக்கிச் செல்கிறாள்:

கல்லறையின் கல்புர‌ட்டப்பட்டு இருப்பதைக் கண்டதும், அப்பெண்களுள் ஒருத்தியான மகதலேனா மரியாள் கர்த்தரின் சரீரத்தை யாரோ கொள்ளை அடித்துவிட்டு போய்விட்டார்கள் என எண்ணி பேதுருவுக்குச் சொல்ல ஓடிவிட்டாள். பிற ஸ்தீரிகளோ கல்லறையிலேயே இருந்தனர்.

யோவான் 20:1,2 - வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள். உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையில் இருந்து எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.

6) பேதுரு தங்கியிருந்த இடம்:

Map - Click to Enlarge

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டப் பின்பு, அப்போஸ்தலர் எல்லாம் ஒரே இடத்தில் பயந்து போய் ஒளிந்துக் கொண்டிருந்தனர் என தவறான கருத்து நிலவி வருகிறது. உண்மையில் பைபிள் படி இயேசு கைது செய்யப்பட்ட பின்பு அப்போஸ்தலர்கள் எல்லாம் ஒன்றாய் கூடி இருக்கவில்லை, மாறாக‌ சிதறி தான் இருந்தார்கள். இயேசு கெத்சமனேவில் கைது செய்யப்பட்ட போதே அவர்கள் எல்லாம் ஓடி விட்டனர், அதில் ஒருவரான யூதாஸ் தன் பாவத்திற்கு வருந்தி தற்கொலை செய்துக் கொண்டார். பேதுரு கர்த்தர் பின்னே வந்தாலும் பயந்து விலகிவிட்டார். இறுதியாக யோவான் மட்டும் சிலுவை மரணம் வரை கூட இருந்தார்.

இதன் பின்பு உயிர்த்தெழுதல் நாள் வரை, பேதுருவும் யோவானும் மட்டும் ஓரிடத்தில் இருந்துள்ளனர். மற்ற ஒன்பது அப்போஸ்தலர்கள் இவர்களோடு இல்லை, அவர்கள் வேறெங்கோ ஓடிவிட்டார்கள். (ஆதாரம்: மாற்கு 16:7; யோவான் 20:10)

7) பேதுருவும் யோவானும் கல்லறைக்கு விரைதல்:

கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டவுடன், மற்ற பெண்களை கல்லறையிலேயே விட்டுவிட்டு மகதலேனா மரியாள் பேதுருவிடத்திற்கு ஓடினாள் என கண்டோம். அச்செய்தியை அவள் கூறக்கேட்டதும் பேதுருவும் உடன் இருந்த யோவானும் கல்லறைக்கு விரைந்தனர்.

யோவான் 20:3  - அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையின் இடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.

8) மற்ற‌ பெண்கள் கல்லறைக்குள் நுழைகின்றனர்:


கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டு மகதலேனா மரியாள் பிரிந்த பின், பிற பெண்கள் கல்லறைக்குள் நுழைந்தனர். அங்கே அவர்களுக்குத் தூதர்கள் தோன்றி "இயேசு உயிர்த்தெழுந்தார்" என அறிவிக்கின்றனர்.

இச்செய்தியில் கூறப்படும் முரண்பாடுகளைக் கீழே காணலாம்,

மத்தேயு சுவிசேசம் ஒரு தூதன் கல்லறைக்கு வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தான் என்கிறது, மாற்கு ஒரு தூதன் கல்லறைக்கு உள்ளே உட்கார்ந்துக் கொண்டிருந்தான் என்கிறது, லூக்கா இரண்டு தூதர்கள் கல்லறைக்குள்ளே நின்றுக் கொண்டிருந்தார்கள் என்கிறது. எது சரி?

அ) பெண்கள் தூதரைக் கண்டது கல்லறை வெளியிலா உள்ளேவா?

மத்தேயு 28:2,3,4 - அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்தில் இருந்து இறங்கி வந்து, வாசலில் இருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போல வெண்மையாகவும் இருந்தது. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.

மத்தேயு கூறுகின்ற இந்த சம்பவம் ஸ்தீரிகள் கல்லறைக்கு வழியில் வந்துக் கொண்டிருக்கும் போதே நடந்துவிட்டது என மேலேயே விளக்கமாக கண்டோம் (காண்க கேள்வி 4)

ஆக பெண்கள் வந்து சேர்கின்ற வரை கல்லை புரட்டின தூதன் வெளியே உட்கார்ந்துக் கிடக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் வந்து சேர்வதற்குள் அவன் கல்லறைக்குள் சென்று விட்டான். மத்தேயு நற்செய்தியாளர் அவன் உள்ளே சென்ற விஷயத்தை தன் நூலில் சொல்லவில்லை. எனவே, கல்லறைக்குள் தான் ஸ்தீரிகள் தூதனைக் கண்டார்கள்.

ஆ) பெண்கள் கண்டது ஒரு தூதனையா இரண்டு தூதர்களையா?

மத்தேயு சுவிசேசம், மாற்கு சுவிசேசம் ஒரு தூதன் என்கிறது, லூக்கா இரண்டு தூதர்கள் என்கிறது, இரண்டில் எது சரி? என மறுப்பாளர்கள் அடிக்கடி கேட்பது வழக்கமே. மாற்கு சுவிசேச வசனத்தைத் தெளிவாகப் படிக்கவும்,

மாற்கு 16:5 - அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலது பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள்.

மத்தேயு, மாற்கு சுவிசேசங்கள் ஒரே தூதன் தான் வந்தான் என்று குறிப்பிடவில்லை. மாறாக வந்த இருவரில் ஒருவனைப் பற்றி மட்டும் சொல்கின்றன. "வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள்" என்ற வார்த்தையைக் கவனிக்கவும். இடது பக்கத்தில் இன்னொருவன் இருக்கிறான் என்பதை மாற்கு நற்செய்தியாளரின் வார்த்தைகள் மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றன‌. ஆனால் அவர் எண்ணம் பயத்தை உண்டாக்கிய வலப்புற தூதனை மட்டும் விவரிப்பதில் உள்ளது, மத்தேயு நற்செய்தியாளரும் வலப்புற தூதனை மட்டும் குறிப்பிடுகிறார்.

மத்தேயு 28:5 - தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.

எனவே, இரண்டு தூதர்கள் கல்லறைக்குள் இருந்தனர் என லூக்கா கூறுவதில் முரணில்லை.

இ) தூதர்கள் உட்கார்ந்திருந்தனரா? நின்று கொண்டிருந்தனரா?

லூக்கா நற்செய்தியில் "எபெஸ்டெசன்" என குறிப்பிடப்பட்டுள்ள‌ கிரேக்க வார்த்தை "நின்றார்கள்" என இங்கு தவறான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, "தோன்றினார்கள்" என்பதே சரியான பதம்.

உதாரணத்திற்கு இயேசு பிறந்த போது கர்த்தருடைய தூதன் மேய்ப்பர்களுக்குத் தோன்றி அச்செய்தியை அறிவித்தான் என்ற வசனத்தில் "எபெஸ்டெசன்" என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. கீழே காணவும்,

லூக்கா 2:8,9 - அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.

தோன்றினார்கள் என்ற வார்த்தையைத் தான் "நின்றார்கள்" என மொழிப்பெயர்த்துள்ளனர்.

லூக்கா 24:2,3,4 - கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டு இருக்கிறதைக் கண்டு, உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், அதைக் குறித்து மிகுந்த கலக்கம் அடைந்து இருக்கையில், பிரகாசம் உள்ள வஸ்திரந் தரித்த இரண்டு பேர் அவர்கள் அருகே நின்றார்கள்.

எனவே, மேலே நாம் ஆராய்ந்த செய்திகளை எல்லாம் கணக்கில் கொண்டால், ஸ்தீரிகள் கல்லறைக்கு வந்த போது கல்லறையின் கல் புரட்டப்பட்டிருந்தது. மகதலேனா மரியாள் பேதுருவிடத்திற்கு விரைந்து ஓட, மற்ற ஸ்தீரிகள் கல்லறைக்குள்ளே சென்றார்கள். அங்கே இரண்டு தூதர்கள் உட்கார்ந்து இருந்ததைக் கண்டார்கள். அதில் வலப்புற தூதனைக் கண்டு அவர்கள் பயப்படும் போது, பெண்களிடம் "இயேசு உயிர்த்தெழுந்தார்" என்ற செய்தி அவர்களால் அறிவிக்கப்படுகிறது. அதனை அறிந்து அவர்கள் திகிலோடே அவ்விடம் விட்டு அப்போஸ்தலரைக் காண ஓடினர்.

அப்போஸ்தலர்கள் ஒன்றாயிராமல் பிரிந்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ளவும். பேதுருவும் யோவானும் ஓரிடத்திலும், மற்ற ஒன்பது அப்போஸ்தலர்கள் வேறு இடத்திலும் இருப்பதை மறவாதீர்கள். மகதலேனா மரியாள் ஏற்கனவே பேதுருவையும் யோவானையும் காண சென்றிருப்பதால் இவர்கள் பிற அப்போஸ்தலர்களைக் காணவே ஓடியிருக்க வேண்டும்.

9) பேதுரு கல்லறைக்கு வந்து சேர்கிறார்:


ஸ்தீரிகள் பிற அப்போஸ்தலருக்குச் சொல்ல கல்லறையை விட்டு புறப்பட்டு விட்டனர். அவர்கள் போன சில நேரத்திற்குள்ளாகவே மகதலேனா மரியாள், பேதுரு, யோவான் கல்லறைக்கு வந்தனர்.

மகதலேனா மரியாள் சொன்னது உண்மையா என சோதிக்க கல்லறைக்குள் சென்ற பேதுருவும், யோவானும் இயேசுவின் சரீரத்தைப் பொதிக்க பயன்படுத்திய சீலைகள் அங்கு கிடப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள், ஆனால் அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்தார் என அறிந்து கொள்ளவில்லை, பின்பு கல்லறையை விட்டு தங்கள் இருப்பிடத்திற்கு இருவரும் திரும்பினார்கள். இதனை லூக்கா 24:12, யோவான் 20:3-10 வசனங்களில் காணலாம்.

10) மகதலேனா மரியாளுக்கு கிடைத்த முதல் தரிசனம்:

பேதுருவும், யோவானும் கல்லறையை விட்டு புறப்பட்டு விட்டனர், ஆனால் மகதலேனா மரியாள் அங்கேயே அழுது கொண்டு நின்றிருந்தாள். பின்பு, கல்லறைக்குள் அவள் பார்த்த போது மற்ற ஸ்தீரிகளுக்கு காட்சி அளித்த இரு தூதர்களை அவளுக்கும் காட்சியளித்தனர், ஒருவன் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தலைமாட்டிலும், இன்னொருவன் கால்மாட்டிலும் உட்கார்ந்திருந்தான். அவர்கள் அவளை நோக்கி, ஏன் அழுகிறாய் என்று கேட்டனர், அவள் "கர்த்தரின் சரீரத்தைக் காணவில்லை" என சொல்லி அழுதாள். அப்பொழுது இயேசு தாமே அவளுக்கு காட்சியளித்து "ஏன் அழுகிறாய்?" என மீண்டும் கேட்டார், அவள் அவரை தோட்டக்காரன் என எண்ணி "நீர் அவரது சரீரத்தை எடுத்துக் கொண்டு போயிருந்தால், அவ்விடத்தை சொல்லி விடும்" என பதில் சொன்னாள். அவளைத் தேற்ற‌ இயேசு, "மரியாளே" என்றார், அவர் இயேசு தான் என உணர்ந்துக் கொண்ட அவள், "ரபூனி (போதகரே)" என சந்தோஷத்தோடு அவரைக் அணைத்துக் கொண்டாள் எனவும் இயேசு தான் உயிர்த்தெழுந்த செய்தியைச் சொல்லுமாறு சொல்லி அவளை அனுப்பி வைத்தார் எனவும் யோவான் சுவிசேசம் (20: 11-18) சொல்கிறது.

அ) இயேசு ஏன் தன்னை தொடவேண்டாம் என்றார்?

யோவான் 20:17  - இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

"என்னை விட்டுவிடு" என்ற அர்த்தம் கொண்ட கிரேக்க‌ வார்த்தைகள் தான் "என்னைத் தொடாதே" என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இயேசுவைக் கண்ட சந்தோசத்தில் மகதலேனா மரியாள் அவரைக் அணைத்து கொண்டாள். எனவே அவர் தான் எப்பொழுதும் அவளுடன் இருக்கப்போவதில்லை, இன்னும் சில காலத்திற்குள் பரத்திற்கு எருந்தருளப் போகிறேன் என்றும் பரிசுத்த ஆவியானவர் சீஷர்களுக்கு துணையிருப்பார் என்றும் கூறி அவளுக்கு நினைவுப்படுத்தினார். அவ்வளவு தான், அவர் தன்னை தொட வேண்டாம் என்று சொல்லவில்லை, இயேசு தன்னை தொடச் சொல்லி பிறரை அனுமதித்ததை யோவான் சுவிசேசமே கூறுகிறது. (காண்க: 20:17)

ஆ) இயேசு சகோதரர் என யாரைக் குறிப்பிடுகிறார்?

கிறிஸ்தவர்கள் மத்தியில் சகோதரர் என்றால் கூடப்பிறந்தவர்களும், உறவினர்களும் மட்டும் அல்ல, கிறிஸ்தவர்களும் ஒருவரையொருவர் சகோதரர் என தான் சொல்லிக் கொள்கிறார்கள். எனவே இயேசு சொல்லச் சொன்னது அவரது உறவுக்காரர்கள், சீஷர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.

11) மற்ற பெண்களுக்கு இயேசு கொடுத்த இரண்டாம் தரிசனம்:

மகதலேனா மரியாளும், பேதுருவும், யோவானும் கல்லறைக்கு விரைந்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்த மற்ற ஸ்தீரிகள் இரு தூதர்கள் சொன்னதைக் கேட்டு கல்லறையை விட்டு பிற அப்போஸ்தலருக்கு அறிவிக்க ஓடினர் என கண்டோம். அவர்கள் கலக்கத்துடன் போய்க் கொண்டிருந்ததால், இயேசுவே அவர்களுக்கு வழியில் காட்சிக் கொடுத்தார். இது அவரது இரண்டாம் தரிசனம்.

மத்தேயு 28:8-10 - அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்து கொண்டார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

13) காவலாளிகள் ஆசாரியர்களுக்குச் செய்தியைச் சொல்கின்றனர்

அதே வேளையில் கல்லறையை விட்டு ஓடிப் போன காவல் சேவகர்கள், நகரத்திற்குள்ளே நுழைந்து யூத ஆசாரியர்களுக்கு தாங்கள் கண்ட சங்கதிகளை எல்லாம் சொன்னார்கள், அப்பொழுது அவர்கள் அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து, சீஷர்கள் இயேசுவின் உடலைக் களவாடிவிட்டு போய்விட்டதாகச் சொல்லுமாறும், தேசாதிபதியால் பிரட்சனைகள் எழுந்தால் தாங்கள் சம்மதப்படுத்திக் கொள்கிறோம் எனவும் தேற்றினார்கள் என மத்தேயு சுவிசேசம் சொல்கிறது. (காண்க மத்தேயு 28: 11-15)

14) பெண்கள் சீஷர்களுக்கு செய்தியை அறிவித்தல்:

ஸ்தீர்கள் தங்களுக்கு இயேசு சொல்லி அனுப்பின‌ செய்திகளை எல்லாம் அப்போஸ்தலர்களுக்கும், பிற சீஷர்களுக்கும் சொன்னார்கள். அப்போஸ்தலர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இல்லை, பேதுருவும் யோவானும் ஒரு இடத்திலும், பிறர் மற்ற இடங்களிலும் பிரிந்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கல்லறை திறந்திருந்ததை முதல் முறையில் அறிவிக்க ஓடின மகதலேனா மரியாள், இப்பொழுது "இயேசு உயிர்த்தெழுந்தார்" என அறிவிக்க ஓடினாள், பிற ஸ்தீரிகளும் ஒவ்வொரு இடங்களில் அறிவித்து வந்தனர். எனவே, இந்த பெண்களால் அப்போஸ்தலர்கள், சீஷர்கள் மத்தியில் நிறைய‌ குழப்பங்கள் எழுந்தன.

-------------------------------------

இதுவரை நாம் கண்ட அத்தனை செய்திகளையும் லூக்கா சுவிசேசம் சுருக்கமாக கூறுகிறது. ஆனால் அதில் அப்போஸ்தலர்கள் பிரிந்து இருந்ததையோ, மகதலேனா மரியாள் மற்ற ஸ்தீரிகளை விட்டு பிரிந்ததையோ, அவள் இரண்டாவது முறை இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை அறிவித்தையோ, பெண்களுக்குக் கிடைத்த தனிப்பட்ட காட்சிகளையோ பிரித்துச் சொல்லவில்லை. ஒட்டுமொத்தமாக நடந்த சம்பவங்களை எல்லாம் லூக்கா சுருக்கி எழுதியிருகிறார் (காண்க: லூக்கா 24:1-12). எனவே, நான்கு சுவிசேசங்களை நாம் ஆராய்ந்தால் நமக்கு தெளிவான காட்சி கிடைக்கிறது. அப்போஸ்தலர்கள் வெவ்வேறு இடங்களில் பிரிந்து இருந்ததையும், மகதலேனா மரியாள் மற்ற ஸ்தீரிகளை விட்டுப் பிரிந்ததையும், அவர்களுக்குக் கிடைத்த தனிப்பட்ட தரிசனங்கள் என எல்லாவற்றையும் அறியலாம். எந்த சுவிசேச ஆசிரியரும் இதனை எல்லாம் விளக்கிச் சொல்லாமல், பொதுவாக சில செய்திகளை மட்டும் விவரித்து உள்ளதே முரண்கள் போல தோன்றுகிறது. இருந்தாலும் அவர்களது செய்தியில் அமைந்துள்ள குறிப்புகளால் நம்மால் தெளிவான சூழலை அறியமுடியும், முரண்கள் இல்லை என்பதை உணர‌ முடியும்.

-------------------------------------

15) சீமோன் பேதுருவுக்கு கிடைத்த மூன்றாம் தரிசனம்:

பெண்கள் சொன்ன செய்திகளால் அப்போஸ்தலர்கள், பிற சீஷர்கள் மத்தியில் பெரும் குழப்பங்கள் எழுந்தன. மகதலேனா மரியாள் ஏற்கனவே பேதுருவையும், யோவானையும் அழைத்து அவர்கள் காலியான கல்லறையை மட்டும் கண்டு சென்றார்கள், ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார் என அறியவில்லை. இப்பொழுது அவள் மீண்டும் சென்று அவர்களிடம் "இயேசு உயிர்த்தெழுந்தார்" என குழப்பினாள். இது ஒரு புறம் இருக்க மற்ற ஸ்தீரிகள் பிற அப்போஸ்தலர்களிடமும் சீஷர்களிடமும் சென்று தாங்கள் கண்டவைகளைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினர்.

இவ்வேளையில் இயேசு சீமோன் பேதுருவுக்கு தரிசனம் அளித்தார். இது அவர் அளித்த மூன்றாம் தரிசனம். (காண்க 1 கொரிந்தியர் 15:5, லூக்கா 24:34)

16) எம்மாவுக்கு சென்ற சீஷர்களுக்கு கிடைத்த நான்காம் தரிசனம்:

மற்ற அப்போஸ்தலர்கள் பேதுருவையும் யோவானையும் விட்டு விலகி இருந்தனர் என்பது நாம் அறிந்ததே. அவர்களுடனே அப்போஸ்தலர் அல்லாத வேறே சீஷர்களும் இருந்தார்கள். அதில் இருந்த இரண்டு சீஷர்கள் எருசலேமை விட்டு அருகில் உள்ள எம்மாவு என்ற ஊருக்குச் சென்றார்கள். அவர்கள் சென்ற போது இயேசு தாமே அவர்களுக்குக் காட்சியளித்து, வேத வாக்கியங்களை உணர்த்தினார், பின்பு அப்பம் பிட்கையில் அவர் இயேசு என அவர்கள் அறிந்துக் கொண்டு எருசலேமுக்கு தங்கள் செய்தியைச் சொல்ல விரைந்து வந்தார்கள்.

17) அப்போஸ்தலர்கள் கூட்டம் கூடிவிட்டது:

பேதுருவும் யோவானும் தனித்திருந்த வேளையில், பேதுருவுக்கு தரிசனம் கிடைத்திருந்தது என ஏற்கனவே கண்டோம் (காண்க கேள்வி 15). ஏற்கனவே பெண்கள் அங்கும் இங்கும் தாங்கள் கண்ட செய்தியைப் பரப்பி வந்தனர். பேதுருவும் இப்பொழுது காட்சிக் கண்டதால், அப்போஸ்தலர்கள் குழப்பத்தைத் தீர்க்க ஒரே இடத்தில் கூடினர். ஆனால் அப்போஸ்தலரில் ஒருவரான தோமா மட்டும் இன்னும் வந்து சேரவில்லை. அங்கு பெண்கள் சொல்லிய‌ செய்திகளும், பேதுருவுக்கு கிடைத்த தரிசனத்தைக் குறித்தும் பேசப்பட்டு வந்தது. இந்த நேரத்தில் எம்மாவுக்குச் சென்ற இரண்டு சீஷர்களும் வந்து சேர்ந்தனர், தாங்கள் கண்ட தரிசனத்தையும் சொன்னார்கள். இதனைக் குறித்து லூக்கா 24:13-25 வசனங்களில் காணலாம்.

18) இயேசு காட்சியளிக்கிறார்! ஐந்தாம் தரிசனம்:

அவர்கள் எல்லாம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கையில் இயேசு அங்கே தோன்றி உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் ஒரு ஆவியைக் காண்கிறதாய் நினைத்துப் பயந்தார்கள். எனவே இயேசு அவர்களுக்கு தன் கரத்தை நீட்டி தொட்டுப் பார்க்கச் சொன்னார். அப்பொழுது அவர்கள் சந்தோசப்பட்டார்கள், இருப்பினும் சிலரால் சந்தேகத்தில் இருந்து இன்னும் விடுபடமுடியவில்லை. இயேசு வேத வாக்கியங்களை எல்லாம் நினைவு கூர்ந்து அவர்கள் அவிசுவாசத்தைக் குறித்துக் கண்டித்தார், பின்பு அவர்களோடு உணவு உண்டு அவர்களை விட்டு பிரிந்துச் சென்றார். இந்த சம்பவம் நடக்கும் போது அப்போஸ்தலரில் ஒருவரான தோமா அங்கு இல்லை...

இக்காட்சியையே லூக்கா 24:36-44 வேதப்பகுதியும், யோவான் 20:19-24 வேதப்பகுதியும் சொல்கின்றன. இந்த இரண்டு வேதப்பகுதிகளும் வெவ்வேறு காட்சிகளைக் குறிப்பிடுவதாக சிலர் தவறாக எண்ணுகின்றனர், இரண்டும் வெவ்வேறல்ல, ஒன்று தான். ஏனெனில் இரண்டு செய்திகளுமே தாங்கள் குறிப்பிடும் காட்சி உயிர்த்தெழுந்தல் நாளின் சாயங்கால வேளையில் நடந்ததாகத் தான் சொல்கின்றன.

எனவே, மேற்கண்ட செய்தியை மறுக்க ஒரு முரண்பாடு சொல்லப்படுகிறது. அதாவது அப்போஸ்தலர்களில் தோமா இல்லாததை லூக்கா நற்செய்திக் கூறவில்லை எனவும், எல்லா அப்போஸ்தலர்களும் இருந்தனர் என்றே லூக்கா கூறுவதாகச் சொல்கின்றனர், ஆனால் நாம் நன்றாக ஆராய்ந்தால், லூக்காவும் தோமாவைக் கணக்கில் இருந்து விட்டுவிட்டார் என்பதை அறியலாம். எப்படி?

யோவான் சுவிசேசம் "பன்னிருவரில் ஒருவர் இல்லை" என்கிறது, லூக்கா சுவிசேசம் "பதினொருவர் இருந்தனர்" என்கிறது. இரண்டும் ஒத்துப் போவதைக் காணலாம். ஆனால் யூதாஸ் காரியோத்தைக் கணக்கில் சேர்த்து மறுப்பாளர்கள் தங்களைக் குழப்பிக் கொள்கின்றனர். அப்போஸ்தலரில் ஒருவரான யூதாஸ் காரியோத்து இயேசு இறப்பதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டார். எனவே, இயேசு தோன்றிய போது மீதமிருப்பது பதினொரு அப்போஸ்தலர்கள் மட்டுமே. அதனால் லூக்கா சுவிசேசம் தோமாவையும் சேர்த்து மீதமுள்ள அப்போஸ்தலர்கள் எல்லாம் அவ்வேளையில் இருந்ததாகச் சொல்வதாக நினைக்கின்றனர்.

இவர்கள் லூக்கா சுவிசேசம் எழுதப்பட்டது முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் என்பதை மறந்ததே இக்குழப்பத்திற்கு காரணம். லூக்கா சுவிசேசம் எழுதப்பட்ட வேளையில் யூதாஸிற்கு பதிலாக மத்தியா என்பவர் அப்போஸ்தலராக எண்ணப்பட்டு வந்தார். யூதாஸ் இழந்த அப்போஸ்தல இடத்தைப் பெறப்போகும் நபருக்கு கீழ்க்கண்ட தகுதி இருக்க வேண்டும் என பேதுரு சொன்னார், அதைக் காணவும்,

அப்போஸ்தலர் 1:21-26 - ஆதலால், யோவான் ஞானஸ்நானங் கொடுத்த நாள் முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்தில் இருந்து உயர எடுத்துக் கொள்ளப்பட்ட நாள் வரைக்கும், அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களில் எல்லாம் எங்களுடனே கூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடு எழுந்ததைக் குறித்து, எங்களுடனே கூடச் சாட்சியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றான். அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா எனப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டு பேரையும் நிறுத்தி: எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்து போன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தல பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக, இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்து கொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி; பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப் போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

எனவே இயேசு ஐந்தாம் காட்சி அளித்த வேளையில் மத்தியாவும் அப்போஸ்தலர்கள் உடனே இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அவ்வேளையில் அவர் அப்போஸ்தலராக எண்ணப்படவில்லை என்றாலும், லூக்கா இந்த சங்கதிகளை எல்லாம் எழுதும் போது அப்போஸ்தலராக எண்ணப்பட்டு வந்தார். எனவே லூக்கா பதினொரு அப்போஸ்தலர்கள் என குறிப்பிடுவதில் தவறில்லை, கீழுள்ள வசனங்களைக் காணவும்.

யோவான் 20:24 - இயேசு வந்திருந்த போது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.

லூக்கா 24:33-35 - அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப் போய், பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் கூடியிருக்கக் கண்டு: கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு, வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்து கொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.

எனவே யூதாசிற்கு பதிலாக‌ மத்தியாவையும் சேர்த்தால் இயேசு காட்சியளித்த போது இருந்த அப்போஸ்தலர்கள் பத்து பேர் அல்ல, பதினோரு பேர். அதன் காரணமாகவே யோவான், "பன்னிருவரில் ஒருவர் இல்லை" என்கிறது, லூக்கா "பதினொருவர் இருந்தனர்" என்கிறது. இரண்டு காட்சியும் ஒன்றுதான்.

19) இயேசு ஏன் சீஷர்களை எருசலேமில் சந்தித்தார்?

கீழுள்ள வசனங்கள் ஒரு முரண்பாடு என சுட்டிக் காட்டப்படுகிறது,

மத்தேயு 28:7 - சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.

ஸ்தீரிகளுக்குத் தோன்றிய தூதன் இயேசு கலிலேயாவில் காட்சியளிப்பார் என சொல்லி அனுப்பினான். வழியில் இயேசுவும் தோன்றி கலிலேயாவில் காட்சியளிப்பதாகச் சொன்னார் என மத்தேயு சுவிசேசம் சொல்கிறது, ஆனால் இப்படி சொல்லிய இயேசு சீஷர்களுக்கு எருசலேமிலேயே காட்சி அளித்துவிட்டார் என மேலே கண்டோம். ஏன் இந்த முரண்பாடு?

ஏனெனில் ஸ்தீரிகள் சொன்ன போது, அப்போஸ்தலர்கள் நம்பவில்லை. கீழுள்ள வசனத்தைக் காணவும்,

லூக்கா 24:11 - இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.

ஸ்தீரிகள் சொல்லிய விஷயத்தை நம்பி அவர்கள் எருசலேமில் இருந்து கலிலேயாவிற்குப் புறப்பட்டால் தான் இயேசு கிறிஸ்துவால் காட்சிக் கொடுக்க முடியும். ஆனால் அவர்கள் முதலில் அதனை நம்பி கிளம்புவதற்கே தயாராக இல்லை. எனவே இயேசு அவர்களுக்கு எருசலேமிலேயே காட்சிக் கொடுக்க வேண்டியதாயிற்று. அப்பொழுது அவர்கள் அவிசுவாசமாய் செயலப்பட்டதை இயேசு கண்டித்தார்.

20) எட்டு நாளைக்குப் பின்பு அளித்த ஆறாவது காட்சி: (தோமா உட்பட)


அவர் அப்போஸ்தலருக்கு காட்சியளித்த நேரத்தில் தோமா இல்லை. தோமாவை நம்ப வைப்பது பிற சீஷர்களுக்குப் பெரிய போராட்டமாக இருந்தது. அதனால் அவர்களால் எட்டு நாளான பின்பும், எருசலேமை விட்டு கலிலேயாவிற்கு செல்ல முடியவில்லை. இறுதியில் தோமாவிற்கு விசுவாசத்தை உண்டாக்க இயேசுவே அப்போஸ்தலர்களிடையே எட்டாம் தினத்தனறு காட்சியளித்தார். இது அவர் கொடுத்த ஆறாம் தரிசனம். கீழுள்ள வசனங்களைக் காணவும்.

யோவான் 20:26-29 - மறுபடியும் எட்டு நாளைக்குப் பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனே கூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாய் இரு என்றார். தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாது இருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

இத்தரிசனம் 1 கொரிந்தியர் 15:5 வசனத்திலும் சொல்லப்பட்டுள்ளது. பவுல் "பன்னிரு அப்போஸ்தலருக்கும் தரிசனமானார்" என்கிறார். யூதாஸ் இறந்திருக்க எப்படி பன்னிரண்டு என கூற முடியும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். மத்தியாவை வைத்து நாம் முன்பு கண்ட விளக்கம் தான் இவ்வசனத்திற்கும். (காண்க: கேள்வி 19)

21) சீஷர்கள் கலிலேயாவைச் சென்றடைதல்:

இயேசுவின் காட்சிகளால் ஓரளவுக்கு திருப்தி அடைந்த அப்போஸ்தலர்கள் கலிலேயாவிற்குச் செல்ல தயாராகி அவ்விடத்தை அடைந்தனர். கால்நடையாக எருசலேமில் இருந்து கலிலேயாவைச் சென்றடைய மூன்று நாட்கள் தேவைப்பட்டிருக்கும் என்கிற பட்சத்தில் உயிர்த்தெழுதல் நிகழ்ந்து பதினொரு நாட்கள் முடிந்தன. கலிலேயா தான் இயேசுவும் அவரது உறவினர்களும் வளர்ந்த இடம். எனவே, இயேசு கலிலேயாவிற்குச் செல்ல முற்பட்டார். இயேசுவின் உறவினர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவரை விசுவாசித்தே இல்லை. (யோவான் 7:3 5; மாற்கு 3:21; மாற்கு 6:4)

இயேசுவின் மேல் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தாலும், அவரது உறவினர்கள் அவரது மரணத்திற்காக துக்கம் கொண்டாட எருசலேமிற்கு வந்திருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை (காண்க மத்தேயு 28:10). எனவே, இயேசு உயிர்த்தெழுந்த போது கல்லறையைக் காண வந்த பெண்களிடம் தன் சீஷர்களையும், உறவினர்களையும் கலிலேயாவிற்கு போகும்படி சொல்லுமாறும், அவர்களுக்கு முன்பு தான் அங்கு சென்றிருப்பேன் என்றும் சொல்லி அனுப்பினார்.

இயேசுவின் உறவினர்களின் கலிலேயாவிற்குச் சென்றனர், ஆனால் அவர்கள் சுபாவத்தை வைத்து பார்க்கும் போது அவர்கள் பெண்கள் தெரிவித்த செய்திகளில் நம்பிக்கைக் கொண்டு சென்றிருக்க வாய்ப்பு குறைவு தான் என தெரிகிறது, ஏதோ உறவு முறை என்ற கடமைக்காக இயேசுவின் ஈமச்சடங்குகளில் கலந்துவிட்டு அன்றாட பிழைப்பைப் பார்க்க‌ கலிலேயாவிற்குச் சென்றிருக்கின்றனர்.

இயேசுவின் அப்போஸ்தலர்களும், அப்போஸ்தலர் அல்லாத சீஷர்களும் நம்பிக்கை கொள்ளவில்லை என நாம் ஏற்கனவே கண்டோம், எனவே, அவர்கள் பெண்கள் பேச்சைக் கேட்டு கலிலேயாவிற்கு கிளம்பாமல் அங்கேயே கால தாமதமாக்கிக் கொண்டிருந்தார்கள். எனவே அவர் கலிலேயாவில் குறித்த இடத்திற்கு யாரும் செல்லும் மனப்பான்மையில் இல்லை என அறியலாம். ஒரு வழியாக இயேசு தொடர் காட்சிகளில் அளித்து அவர்களை கலிலேயாவிற்குப் புறப்பட்டு வர செய்துவிட்டார். சீஷர்கள் கலிலேயாவிற்குச் சென்றுவிட்டனர்.

22) கலிலேயா கடற்கரையில் அளித்த ஏழாம் காட்சி:

கலிலேயாவில் அவர்கள் தங்கியிருந்த வேளையில், பேதுருவும் அவருடன் சில அப்போஸ்தலர்களும், அப்போஸ்தலர் அல்லாத சில சீஷர்களும் திபேரியா கடற்கரைக்கு மீன்பிடிக்கச் சென்றார்கள். அங்கே அவர்கள் நாளளவு போராடியும் மீன்கள் அகப்படவில்லை. காலை விடிந்த போது, இயேசு அவர்களுக்கு காட்சியளித்தார். இது அவரது ஏழாம் தரிசனம். அங்கே அவர்கள் மீன்பிடித்து வந்து, இயேசு கிறிஸ்துவோடு கரையில் அமர்ந்து உண்டனர். பின்பு இயேசு, தன் மக்களை வழிநடத்தும் பொறுப்பை பேதுருவிடம் கொடுத்து விடைபெற்றார்.

அ) இத்தரிசனம் மூன்றாவதா? ஏழாவதா?

யோவான் 21:14 - இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த பின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் இது மூன்றாம் தரிசனம் அல்ல. ஏனெனில் யோவான் சுவிசேசம் பிரகாரமே இத்தரிசனம் நான்காம் இடத்தைப் பெறுகிறது.

1) மகதலேனா மரியாளுக்கு கொடுத்த தரிசனம்

2) தோமா இல்லாத போது அப்போஸ்தலருக்கு அருளிய தரிசனம்

3) எட்டாம் நாளில் தோமாவிற்காக அளித்த தரிசனம்

4) திபேரியா கடற்கரையில் அளித்த தரிசனம்

யோவான் சுவிசேசம் அப்போஸ்தலர்களையும், அப்போஸ்தலர் அல்லாத சீஷர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதில்லை. பொதுவாக எல்லாரையும் சீஷர்கள் என்றே அழைக்கிறது. மகதலேனா மரியாள் கூட ஒரு சிஷ்யை தான், ஆனால் அவள் அப்போஸ்தலர் அல்ல. யோவான் நற்செய்தியாளர் "சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம்" என கூறுவதில் இருந்து, ஒரு குழுவாக கூடியிருந்த அப்போஸ்தலருக்கு இயேசு வெளிப்படுத்தின தரிசனங்களை மட்டும் கணக்கிட்டு மூன்றாம் தரிசனம் என்கிறார் என அறியலாம். எனவே இச்செய்தியின் படி இயேசு குழுவாகக் கூடியிருந்த அப்போஸ்தலருக்கு அருளிய தரிசனங்களை ஆராய்ந்தால், இயேசு திபேரியா கடற்கரையில் அளித்த தரிசனம் மூன்றாவது. அதுவே மொத்தமாக ஆராய்ந்தால் ஏழாவது. இரண்டுமே சரி தான், கீழே காணவும்.

காட்சி 1: மகதலேனா மரியாள்

காட்சி 2: கல்லறைக்குச் சென்ற மற்ற பெண்கள்

காட்சி 3: அப்போஸ்தலர் பேதுரு

காட்சி 4: எம்மாவுக்கு போன அப்போஸ்தலர் அல்லாத இரண்டு சீஷர்கள்

காட்சி 5: தோமா இல்லாமல் கூடியிருந்த அப்போஸ்தலர் குழு (1)

காட்சி 6: தோமாவுடன் கூடியிருந்த அப்போஸ்தலர் குழு (2)

காட்சி 7: திபேரியா கடற்கரையில் இருந்த அப்போஸ்தலர் குழு (3)

அப்போஸ்தலருக்கு இயேசு அளித்த காட்சிகளை கவனித்தால் காட்சி 1, காட்சி 2, காட்சி 4 கணக்கில் சேராது. காட்சி 3 அப்போஸ்தலர் பேதுருவுக்கு கிடைத்த தரிசனமானாலும், அவர் தனித்து அந்த தரிசனத்தைப் பெற்றார், அவரோடு பிற அப்போஸ்தலர்கள் அவ்வேளையில் இல்லை. எனவே கூட்டமாக கூடியிருந்த அப்போஸ்தலருக்குக் கிடைத்த மூன்றாம் தரிசனம் காட்சி 7 தான்.

23) கலிலேயா மலையின் மேல் இயேசு கொடுத்த எட்டாம் காட்சி:

ஒரு வழியாக உயிர்த்தெழுதல் நாளின் போது அவர் கலிலேயாவில் முன்குறித்த காட்சிக்கான வேளை வந்தது. அவரது அப்போஸ்தலர்கள், அப்போஸ்தலர் அல்லாத சீஷர்கள், உறவினர்கள், பிற விசுவாசிகள் என ஐந்நூறுக்கும் மேற்பட்ட நபர்கள் கூடியிருந்த வேளையில் கலிலேயாவில் இருந்த மலை மீது இயேசு அவர்கள் எல்லாருக்கும் காட்சி அளித்தார்.

இதனையே மத்தேயு 28:16-20, 1 கொரிந்தியர் 15:6 வசனங்கள் குறிப்பிடுகின்றன.

24) யாக்கோபுக்கு கிடைத்த ஒன்பதாம் தரிசனம்:

கலிலேயாவில் ஜனங்கள் கூடியிருந்த போது இயேசுவின் உறவினரான‌ யாக்கோபு என்பவர் அவர்களுடன் இருந்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. இருந்தாலும் இவருக்கு தனியாக இயேசு காட்சிக் கொடுத்தார். இது அவர் அளித்த ஒன்பதாம் தரிசனம். (காண்க 1 கொரிந்தியர் 15:7)

இந்த காட்சியால் அவர் விசுவாசமுள்ளவராகி இயேசுவை ஏற்றார், எருசலேமில் ஊழியம் செய்கின்ற அளவிற்கு விருத்தியடைந்து அப்போஸ்தலர்களோடு சேர்ந்து பல காலம் சபையை நடத்தினார், இறுதியில் இயேசு கிறிஸ்துவிற்காக யூதர்களால் கல்லெறியப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார்.

இந்த யாக்கோபை முதல் பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவராக நினைத்து குழம்ப வேண்டாம், இவர் முற்றிலும் வேறு நபர். இத்தொடுப்பில் இவரைப் பற்றி பைபிள் கூறும் செய்திகள் எல்லாம் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

25) பரத்திற்கு எழுந்தருளிப் போகிறார் இயேசு:


கர்த்தரின் உறவினர்கள் அவர் ஊழியம் செய்துவந்த நாட்களில் அவரை பலமுறை சந்தேகப்பட்டு கவலைக்குள்ளாக்கினர் என முன்னமே கண்டோம். இருந்தாலும் அவர் கலிலேயாவில் நடத்திய அற்புத காட்சிகளால் அவர்களும் விசுவாசமுள்ளவர்கள் ஆனார்கள். இதன் பின்பு இயேசு தன் தாயாரோடும், உறவினர்களோடும், அப்போஸ்தலர்களோடும், அப்போஸ்தலர் அல்லாத பிற சீஷர்களோடும் இருபது நாட்களுக்கு மேலாக காட்சியளித்து அவர்கள் அன்பையும் விசுவாசத்தையும் பெற்றார். எல்லாரும் கலிலேயாவை விட்டு எருசலேமிற்கு மீண்டும் சென்றனர். அங்கே அவர்களிடையே பரிசுத்த ஆவியானவரின் வருகையைப் பற்றி இயேசு போதித்தார். பின்பு இயேசு அருகாமையில் உள்ள பெத்தானியா வரைக்கும் அவர்களை அழைத்துக் கொண்டு போய் பெந்தகொஸ்தே நாள் வரை எருசலேமிலேயே இருக்கும் படி கூறினார். எல்லாம் முடிந்த பிறகு அவர்களை ஆசீர்வதித்து பரலோகத்திற்கு எழுந்தருளினார், ஒரு மேகம் அவர்களின் கண்களுக்கு மறைவாக அவரை எடுத்துக் கொண்டது. இதுதான் அவர் பரத்திற்கு எழுந்தருளும் முன் கொடுத்த பத்தாவது இறுதி தரிசனம். உயிர்தெழுந்த நாளில் இருந்து 40 நாளில் இயேசு விண்ணேறினார்.

அப்போஸ்தலர் 1:10-14 - அவர் போகிற போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந் தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தில் இருந்து வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவ மலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அவர்கள் அங்கே வந்தபோது மேல் வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். அங்கே இவர்கள் எல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங் கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

இப்பதிவு சுவிசேசங்களுக்குள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து முரண்பாடு உள்ளது என கூறும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமாக எழுதப்பட்டு இருக்கிறது. ஒரு விஷயம் விடாமல் எல்லாமே மேலே ஆராயப்பட்டுள்ளன. இப்பொழுது உங்களுக்குத் தெளிவான விவரங்கள் புரிந்திருக்கும் என நம்புகிறேன். இனி விசுவாசிப்பதும், விசுவாசிக்க மறுப்பதும் உங்கள் உரிமை. ஏனெனில் இங்கு நான் மனப்பூர்வமாக நம்புகின்ற செய்திகளையே பைபிளில் இருந்து தொகுத்துள்ளேன், நான் விசுவாசிக்கும் செய்திகளில் முரண்பாடு இல்லை என்பதே என் கருத்து. ஆமென்.

இச்செய்திகளை எல்லாம் வைத்து உயிர்த்தெழுதல் நாள் முதல் பரலோகத்திற்கு இயேசு எழுந்தருளிய நாள் வரை கணிக்கப்பட்ட தெளிவான கால அட்டவணையை இத்தொடுப்பில் காணலாம்.

Monday, 16 June 2014

பவுல் குறிப்பிடும் கர்த்தரின் சகோதரனான யாக்கோபு யார்? அப்போஸ்தலரா? இல்லையா?


முதலில் நாம் சீஷர்கள், அப்போஸ்தலர்கள், சகோதரர்கள் என்ற வார்த்தைகளுக்குரிய‌ வித்தியாசத்தை அறிந்துக் கொள்ள வேண்டும், இயேசு கிறிஸ்துவை பின்பற்றிய மக்கள் அநேகர், அவர்களை பைபிள் சீஷர்கள் என அழைக்கிறது. பிற்காலத்தில் சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் வழங்கலாயிற்று, அந்த சீஷர்களில் சிலரை மட்டும் தன் திருப்பணிக்காக இயேசு தெரிந்துக் கொண்டார், அவர்களே அப்போஸ்தலர் என அழைக்கப்படுகின்றனர். கிறித்தவ வட்டாரத்தில் அன்று முதல் இன்று வரை கிறிஸ்தவர்கள் தங்களை சகோதரர்கள் என அழைத்துக் கொள்வது வழக்கம் தான், பைபிளில் சில இடங்களில் விசுவாசத்தின் நிமித்தமாக சகோதரர் என சிலர் குறிப்பிடப்படுகின்றனர், சில இடங்களில் உறவு முறையைக் குறிக்க சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர், வசனம் கூறப்படும் சூழ்நிலையை வைத்து வித்தியாசங்களை அறிந்துக் கொள்ள வேண்டும்.

கர்த்தரின் சகோதரனான யாக்கோபு ஒரு அப்போஸ்தல‌ரா?

பவுல் குறிப்பிடும் கர்த்தரின் சகோதரனான யாக்கோபு யார் என்பதை பவுலின் நிருபமே தெளிவாகச் சொல்கிறது. அந்த வசனங்களைக் காணலாம்,

கலாத்தியர் 1:19 - கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.

மேற்கண்ட வசனம் தெளிவாகச் சொல்கிறது, கர்த்தரின் சகோதரனான யாக்கோபு ஒரு அப்போஸ்தலர் தான்.

சகோதரர் என்ற வார்த்தை இங்கு எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது? யாக்கோபு இயேசு கிறிஸ்துவின் உறவு முறை சகோதரனா? அல்லது விசுவாச ரீதியில் அழைக்கப்படும் சகோதரனா?

நிச்சயமாக இவ்வசனம் விசுவாசத்தின் ரீதியாக அழைக்கப்பட்டது அல்ல, இயேசு கிறிஸ்துவோடு உள்ள உறவு முறையின் காரணமாகவே யாக்கோபு, "கர்த்தரின் சகோதரன்" என உரிமையோடு அழைக்கப்படுகிறார். விசுவாசத்தின் ரீதியாகவே யாக்கோபை பவுல் "கர்த்தரின் சகோதரன்" என்கிறார் என்றால் பேதுருவையும் யோவானையும் மற்ற அப்போஸ்தலர்களையும் கூட பவுல் அவ்வாறு சில முறை குறிப்பிடுவார் என எதிர்பார்க்கலாம், ஆனால் பவுலில் நிருபங்களில் அத்தகைய செய்தி இல்லை, யாக்கோபு ஒருவரை மட்டுமே பவுல் இவ்வாறு சிறப்பித்து சொல்கிறார். யாக்கோபு இயேசு கிறிஸ்துவின் உறவு முறை தான்.

யாக்கோபு இயேசுவின் உண்மையான சகோதரனா? அல்லது சகோதர முறை கொண்ட உறவினரா?

சுவிசேசங்களிலும் இயேசு கிறிஸ்துவுக்கு யாக்கோபு என்கிற சகோதரன் இருந்தார் என தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது,

மாற்கு 6:3 - இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.

மாற்கு 6:3 குறிப்பிடும் யாக்கோபையே பவுலும் குறிப்பிடுகிறார் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த யாக்கோபு இயேசு கிறிஸ்துவின் உண்மையான சகோதரனா? அல்லது சகோதர முறை கொண்ட ஒரு உறவினரா? என்பது தான் நாம் ஆராய வேண்டியது.

இயேசு கிறிஸ்துவின் தாயார் மரியாள், வளர்ப்பு தந்தை யோசேப்பு. இயேசுவே மரியாளின் முதல் மகன். இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு பின்பு, மரியாளுக்கும் யோசேப்புக்கும் குழந்தைகள் பிறந்திருக்கலாம். பைபிளும் அவருக்கு சகோதரர்கள் இருந்தனர் என பல இடங்களில் கூறுகிறது. எனவே, இவர்கள் இயேசுவின் பிறப்புக்குப் பின்பு மரியாளிற்கும் யோசேப்புக்கும் பிறந்த குழந்தைகளாக இருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். ஆனால் யோவான் சுவிசேசம் இந்த கருத்தோடு சிறிது முரண்படுகிறது, அவ்வசனங்களைக் கீழே காணலாம்,

யோவான் 19:26,27 - அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக் கொண்டான்.

இயேசு சிலுவையில் இறக்கும் போது தன் தாயை தன் அன்பு சீடரின் அரவணைப்பில் ஒப்படைத்தார். எனவே, இயேசு இறக்கும் முன்பே யோசேப்பு இறந்துவிட்டார் என்பது தெளிவாகிறது, அதோடு மரியாளுக்கு இயேசு கிறிஸ்துவைத் தவிர்த்து வேறு மகன் இல்லை என்பதும் தெளிவாகிறது, ஏனெனில் மரியாளுக்கு யோசேப்போ அல்லது பிற மகன்களோ இருந்தால் அவர் தன் தாயை தன் அன்புச் சீடரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமே இல்லை.

எனவே, யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இயேசுவின் உண்மையான சகோதரர்கள் அல்ல, மாறாக சகோதர முறை கொண்ட உறவினர்கள் என அறியலாம்.

யாக்கோபின் பெற்றோர் யார்?

பைபிளில் பல பெண்கள் மரியாள் என்கிற பெயரோடு காணப்படுகின்றனர், எனவே, படிக்கும் போது ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க மரியாள் என்கிற பெயருக்கு முன் அடையாளச் சொற்களைச் சேர்த்து பைபிள் வித்தியாசப்படுத்துகிறது. உதராணத்திற்கு, "இயேசுவின் தாயாகிய மரியாள்", "மகதலேனா மரியாள்", "மாற்கு எனும் பேர்கொண்ட யோவானின் தாயாகிய மரியாள்" என பலவற்றைக் கூறலாம்.

இயேசு கிறிஸ்துவுக்கு யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என சகோதரர் சிலர் இருந்தனர் என மாற்கு 6:3 கூறுவதாகவும், பைபிள் கூறுகின்ற பிற‌ செய்திகளை வைத்துப் பார்க்கும் போது இவர்கள் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சகோதரராக இருக்க முடியாது, மாறாக சகோதர முறை கொண்ட உறவினர்களாகவே இருக்க வேண்டுமென‌வும் கண்டோம்.

பைபிளில் "யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாள்" என சில இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. இயேசுவின் உறவுக்கார சகோதரர்களாக கருதப்படும் "யாக்கோபு, யோசே, சீமோன், யூதா" என்ற பட்டியலில் காணப்படும் யாக்கோபையும் யோசேயையும் தான் இவ்வசனங்கள் குறிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. அவற்றில் ஒரு வசனத்தைக் காணலாம்.

மத்தேயு 27:56 - அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.

யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்கள் யோசேப்புக்கும் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கும் பிறந்தவர்களல்ல என்பதற்கு இவ்வசனம் இன்னும் ஆதாரவாக இருக்கிறது, ஏனெனில் அவர்கள் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கும் யோசேப்புக்கும் பிறந்த பிள்ளைகளாய் இருந்தால், மேற்கண்ட வசனம் இரண்டாவது பெண்ணை "யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாள்" என கூறுவதைக் காட்டிலும் "இயேசுவின் தாயாகிய மரியாள்" என்றே நேரடியாகக் கூறியிருக்கலாம்! பிற மரியாக்களில் இருந்து கன்னி மரியாளை வித்தியாசப்படுத்த பைபிள் "இயேசுவின் தாயாகிய மரியாள்" என அழைக்கிறது. ஆனால் மேற்கண்ட வசனம் "யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாள்" என ஒரு மூன்றாம் நபரைக் குறிப்பிடுவது போல குறிப்பிடுவதால் யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்கள் இயேசுவின் உண்மையான சகோதர‌ர்கள் அல்ல என இன்னொரு முறை தெளிவாகிறது.

யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இயேசுவின் உண்மையான சகோதரர்கள் அல்ல, உறவுக்காரச் சகோதர்கள் மட்டுமே. இந்த நால்வரின் தாயின் பெயர் கூட மரியாள் தான்.

இன்னொரு சுவாரசியான விஷயம் என்னவெனில், இயேசுவிற்கு மரியாள் என்கிற பெயரிலேயே ஒரு சிற்றாய் இருந்ததார் என‌ பைபிளில் கூறப்பட்டுள்ளது, அந்த வசனத்தை கீழே காணலாம்.

யோவான் 19:25 - இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

எனவே, யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்கள் யார் என்பதற்கு இது இன்னும் தெளிவைத் தருகிறது. யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்கள் கிலெயோப்பா மரியாளின் மகன்கள். கிலெயோப்பா மரியாள் இயேசுவின் தாய்க்கு சகோதரி என்பதால், இயேசுவும் மேற்கண்ட நால்வரும் சகோதர உறவு முறை கொண்டவர்கள். அதில் ஒருவரான‌ யாக்கோபு என்பவரையே பவுல் "கர்த்தரின் சகோதரன்" என்கிறார். கர்த்தரின் சகோதரனான யாக்கோபும் ஒரு அப்போஸ்தல‌ர் தான் என பவுல் கூறுவதையும் மேலே கண்டோம். இனி, யாக்கோபின் அப்போஸ்தலப் பட்டத்தைக் குறித்துக் காணலாம்.

கர்த்தரின் சகோதரனான யாக்கோபு பன்னிரு அப்போஸ்தலரில் ஒருவரா?

அப்போஸ்தலர்கள் என்றவுடனே இயேசு தன் ஊழியத்தின் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்த பன்னிரண்டு சீடர்களாகத் தான் இருக்க வேண்டும் என நினைப்பது தவறு. அவர்கள் பன்னிருவர் மட்டும் அப்போஸ்தலர் அல்ல, இன்னும் கூட அப்போஸ்தலர்கள் உள்ளனர்.

கர்த்தரின் சகோதரனான யாக்கோபு ஒரு அப்போஸ்தலர் தான் என மேலேயே கண்டோம், ஆனால் அவர் முதல் பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவர் அல்ல. மாறாக அவர் இயேசுவின் உயிர்தெழுதலிற்கு பின்பே அப்போஸ்தலர் ஆனார். அதற்கு முன்பு வரை அவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவில்லை. கீழுள்ள வசனங்களைக் காணவும்,

யோவான் 7:3,4,5 - அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி இவ்விடம் விட்டு யூதேயாவுக்குப் போம். பிரபலமாய் இருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப் பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.

1 கொரிந்தியர் 15:3 - 8 - நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்ன என்றால், கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள் வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரை அடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன் பின்பு அப்போஸ்தலர் எல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்.

அப்போஸ்தலர் 1:10 - 14 - அவர் போகிற போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந் தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்கள் அருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்தில் இருக்கிற ஒலிவ மலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அவர்கள் அங்கே வந்த போது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கி இருந்தார்கள். அங்கே இவர்கள் எல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங் கூட ஒரு மனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் போது, அவர் மேல் அவருடைய சகோதரர்கள் சந்தேகம் கொண்டார்கள். பின்பு உயிர்ந்தெழுந்த பிறகு தன் சகோதரரில் ஒருவரான யாக்கோபுக்கு இயேசு தரிசனமானார், அதன் பின்பு பெந்தகொஸ்தே நாளின் போது அவருடைய சகோதரர்களும் நம்பிக்கை உள்ளவர்களாகி ஜெபத்தில் ஈடுப்பட்டனர் என காணலாம். இதன் பின்பே கர்த்தரின் சகோதரனான யாக்கோபும் ஒரு அப்போஸ்தலராக மாறினார். இவர் முதல் பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவரல்ல.

பவுலின் நிருபத்திலும் இதை காணலாம். அதில் வருகின்ற "எனக்கு முன்னே அப்போஸ்தரானவர்கள்" என்ற வார்த்தையைக் கவனிக்கவும்.

கலாத்தியர் 1: 17-19 - எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்கள் இடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபி தேசத்திற்குப் புறப்பட்டுப் போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பி வந்தேன். மூன்று வருஷம் சென்ற பின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்து நாள் தங்கியிருந்தேன். கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.

கர்த்தரின் சகோதரனான யாக்கோபைப் போல பவுலும் ஒரு அப்போஸ்தலராக இயேசு கிறிஸ்துவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் இருவரை தவிர இன்னும் அப்போஸ்தலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உள்ளனர். அவர்களைக் கீழே காணலாம்.

1) மத்தியா

அப்போஸ்தலர் 1:24-26 - அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும், மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி: எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக, இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்து கொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி; பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப் போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

2) பர்னபா

அப்போஸ்தலர் 14:11 - 17 - பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷ ரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி, பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள். அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டு வந்து, ஜனங்களோடே கூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்ட பொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய் மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போலப் பாடுள்ள மனுஷர் தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களை விட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்ப வேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்க விட்டிருந்தும், அவர் நன்மை செய்து வந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக் குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.

3) அப்பொல்லோ

1 கொரிந்தியர் 4:6 - 9 - சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ண வேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக் கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்பு அடையாதிருக்கவும், நான் உங்கள் நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன். அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக் கொள்ளாதது யாது? நீ பெற்றுக் கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன் போல் ஏன் மேன்மை பாராட்டுகிறாய்? இப்பொழுது திருப்தி அடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாய் இருக்கிறீர்களே, எங்களை அல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாய் இருக்கும்; அப்பொழுது உங்களுடனே கூட நாங்களும் ஆளுவோமே. எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்கு குறிக்கப்பட்டவர் போல கடைசியானவர்களாய் காணப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.

4) தீமோத்தேயு மற்றும் சில்வான்

1 தெசலோனிக்கேயர் 1:1,2:6 - பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.... நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக் கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.

5) அன்றோனீக்கு மற்றும் யூனியா

ரோமர் 16:7 - அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனே காவலில் கட்டுண்டவர்களுமாய் இருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.

(குறிப்பு: "அப்போஸ்தலருக்குள் பெயர்பெற்ற" என்ற இவ்வார்த்தைகளுக்குரிய பொருள் மாறக் கூடும். ஒன்று, அன்றோனீக்கும் யூனியாவும் பெயர்பெற்ற அப்போஸ்தலராக‌ எண்ணப்பட்டிருக்கலாம் (அல்லது) இவர்கள் இருவரும் அப்போஸ்தலருக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருக்கலாம். பவுல் எந்த அர்த்தத்தில் சொல்கிறார் என தெரியவில்லை.)

இன்னும் சிலர் கூட அப்போஸ்தலராக கருதப்படுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு கிறிஸ்துவைக் கூட பைபிள் அப்போஸ்தலர் என்கிறது,

எபிரேயர் 3:1 - இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கை பண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாய் இருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப் பாருங்கள்.

எனவே, அப்போஸ்தலர் என்றவுடன் இயேசு தன் ஊழியத்தின் ஆரம்பத்தின் போது தேர்ந்தெடுத்த சீஷர்களை மட்டும் எண்ண கூடாது. அதற்கு பின்பும் அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவால் எழுப்பப்பட்டனர்.

கர்த்தரின் சகோதரனான யாக்கோபு ஒரு அப்போஸ்தலர் தான், ஆனால் அவர் இயேசுவின் உயிர்தெழுதலிற்கு பின்பு அப்போஸ்தலராக்கப்பட்டார்.

Tuesday, 10 June 2014

நீங்கள் மறுத்தாலும் விடுதலை பயணம் உண்மையே!

எகிப்தில் அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேலர்கள் கடவுளால் மீட்கப்பட்டு கானான் தேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர் என பைபிள் கூறுகிறது. இஸ்ரவேலர்களின் விடுதலைப் பயணத்திற்கு ஒரு ஆதாரம் கூட இல்லையென்றும், அது முழுக்க முழுக்க ஒரு கட்டுக்கதை எனவும் சில வலைப்பூக்கள் பைபிளை இகழ்ந்து வருகின்றன. வரலாற்று ஆய்வாளர்களும் யாத்திராகமம் ஒரு கட்டுக்கதையே என்றே ஏற்கின்றனர் என்பது இவர்களின் கருத்து. உண்மையில் அப்படி அல்ல, பல வரலாற்று ஆய்வாளர்கள் யாத்திரகமத்தின் பின்பு வெளிவராத சரித்திர உண்மை ஏதோ புதைந்து கிடைப்பதாகவே எண்ணுகின்றனர். ஏனெனில் இஸ்ரவேலர்கள் தங்களைக் குறித்து இக்கதையில் மிகவும் இழிவாக சித்தரித்துக் கொள்கின்றனர், நாங்கள் அடிமைகளாய் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அவதிப்பட்டோம் என பைபிளில் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர். மேன்மையாக தங்களை புகழ்ந்துக் கொள்ளாமல் இவ்வாறு தங்கள் அடையாளத்தை இஸ்ரவேலர்கள் ஏன் கொச்சைப்படுத்திக் கொள்கின்றனர் என ஆய்வாளர்கள் பலர் வியப்புக்குள்ளாகிறார்கள், அதில் ஒருவர் பின்கல்ஸ்டீன், இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக் கழகத்தில் அகழ்வராய்ச்சித் துரை பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், பைபிள் உண்மையல்ல என கருத்துக்களை முன்வைத்து ஒரு நூலையே வெளியிட்டார். ஆனால் பின்கல்ஸ்டீனின் நூல்கள் கூட யாத்திராகமத்தில் சரித்திர உண்மைகள் புதைந்திருக்கலாம் என கூறுகின்றன‌, அதிலிருந்து ஒரு குறிப்பைக் காணலாம்,

So where does this leave us? Can we say that the Exodus, the wandering, and -most important of all- the giving of the Law on Sinai do not possess even a kernel of truth? So many historical and geographical elements from SO MANY PERIODS may have been embedded in the Exodus story that it is hard to decide on a single unique period in which something like it might have occurred.

p.65, "Did the Exodus Happen?"  Israel Finkelstein & Neil Asher Silberman. The Bible Unearthed, Archaeology's New Vision of Ancient Israel and the Origin of its Sacred Texts. New York. The Free Press. 2001.  ISBN  0-684-86912-8

தமிழாக்கம்: "இப்படியிருக்க இவைகளெல்லாம் நம்மை எங்கே விடுகிறது? விடுதலைப் பயணம், வனாந்திர வாழ்க்கை, இவைகளில் முக்கியமாக சீனாயில் நியாப்பிரமாணங்களைப் பெற்றுக் கொள்ளுதல் என எதுவுமே ஒரு சிறு உண்மையைக் கூட கொண்டிருக்கவில்லை என நாம் கூறலாமா? பல காலங்களைச் சார்ந்த பல‌ சரித்திர, பூகோள‌ தடயங்களை யாத்திராகம கதையோடு பொருத்த முடியும், எனவே அது போன்ற சம்பவம் எப்பொழுது நடந்தது என ஒரு குறிப்பிட்டக் காலத்தைத் தேர்ந்தெடுக்க கடினமாக உள்ளது"

இது தான் நடுநிலையான ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகின்ற உண்மை நிலை. நினைவில் கொள்ளுங்கள், பைபிளை உறுதிப்படுத்தும் ஒரு அகழ்வாராய்ச்சித் தடயம் கிடைத்தாலும் அதன் மீது சந்தேகம் எழுப்பும் முக்கிய நபர் பின்கல்ஸ்டீன் அவர்கள் தான். அந்த ஆதாரம் தனக்கு திருப்தியளிப்பதாக இருந்தால் மட்டுமே பின்கல்ஸ்டீன் அதை ஏற்கிறார். அத்தகைய ஒருவர் கூட யாத்திராகமத்தில் சரித்திர உண்மைகள் புதைந்திருக்கலாம் என சந்தேகிப்பது சிந்திக்க வேண்டிய விஷயம். சில வலைப்பூக்கள் யாத்திராகமம் என்பது முழுக்க முழுக்கக் கட்டுக்கதை என சரித்திர ஞானம் எதுவும் இல்லாமல், அவ்வாறு இருப்பது போல காட்டிக் கொண்டு சிறுபிள்ளைத் தனமாக பதிவுகளை எழுதி வருகின்றன. எனவே, நாம் பதிவிற்குள் நுழையலாம், சரித்திர பார்வையில் யாத்திராகமத்தில் புதைந்துள்ள உண்மைகளைக் குறித்துக் காணலாம்.

இன்று சரித்திர ஆய்வாளர்கள் எவ்வளவு தேடினாலும் ஒரு ஆதாரம் கூட யாத்திராகமத்திற்குக் கிடைக்க போவதில்லை. ஏன்?

1) பைபிளிற்கு ஏற்றவாறு அகழ்வாராய்ச்சித் தடயங்களைத் தேடாமல், அகழ்வாராய்ச்சி தடயங்களுக்கு ஏற்றவாறு பைபிளை விளக்க முயற்சிக்கின்றனர். இது தவறு, பைபிளின் வார்த்தைக்கு மதிப்பு தராத வரை அவர்களின் முயற்சி வீண். உதாரணத்திற்கு, கி.மு 12-ஆம் நூற்றாண்டில் இஸ்ரவேல் தேசப்பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட புது பட்டணங்கள் உருவாகி இருப்பது அகழ்வாராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, இஸ்ரவேலர்கள் கானானை அணுகி குடி அமர்ந்த நேரம் இக்காலமாக‌த் தான் இருக்கும் என கணித்து கி.மு 1250 தான் விடுதலைப் பயணம் நிகழ்ந்திருக்க வேண்டும் என கருதுகின்றனர். எனவே, கி.மு 1250 என்ற ஆண்டை மனதில் பதித்துக் கொண்டு ஆதாரங்களைத் தேடி அதில் தோல்வி அடைந்ததும் பைபிளின் உண்மையைக் குறித்து மறுப்புத் தெரிவிக்கின்றனர். விடுதலைப் பயணம் உண்மையானால் அது கி.மு 1250 தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பல ஆய்வாளர்களிடையே வேறூன்றிவிட்டது, இன்று நீங்கள் மாற்று கருத்து தெரிவித்தால் அவர்களால் ஏளனம் பேசப்படுவீர்கள். பிரியாண்ட் வுட் என்கிற கிறிஸ்தவ வரலாற்று ஆய்வாளர் மாற்றுக் கருத்து தெரிவித்து நன்றாக வாங்கிக்கட்டி வருகிறார்.

2) இஸ்ரவேலர்கள் சுற்றித் திரிந்த வனாந்திர பகுதியைக் குறித்து தெளிவில்லை, சிலர் எகிப்தின் வட பகுதியில் உள்ள பாலைவனத்தையும், சிலர் அரேபிய பாலைவனத்தையும் முன்வைக்கின்றனர். இரண்டையும் சேர்த்து அகழ்வாராய வேண்டிய நிலப்பகுதி மிக மிக அதிகம். அதோடு சவுதி அரேபியா அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, துல்லியமான இடம் கண்டுபிடிக்கப்பட்டாலே அகழ்வாய்வு எளிதாகும். தற்போது சந்தேகிக்கப்படுகின்ற ஒவ்வொரு இடமாக ஆராய்ந்து வருகின்றனர், அவ்வாறு தென் சீனாயில் ஆராய்ந்த போது வழிபாடு மிகுந்து விளங்கியதை உறுதிப்படுத்தும் பலிபீடங்கள், பானை ஓடுகள் என கிட்டத்தட்ட நாலாயிர அகழ்வாராய்ச்சி தடயங்கள் கிட்டியுள்ளன, ஆனால் இக்கண்டுபிடிப்பு காலத்தால் கி.மு 2500 வரை பின் தள்ளிச் செல்கிறது. இவ்வேளையில் இப்பகுதியில் வழிபாட்டுக் காரியங்கள் உச்சக்கட்டத்தில் இருந்திருக்கின்றன என பல ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இருந்தாலும் ஆய்வாளர்களால் விடுதலை பயணத்திற்கு ஏற்கப்பட்ட காலத்தை விட இவை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முரண்படுவதால் இவற்றை யாத்திரகாமத்தோடு இணைக்க முடியாது. இதனை ஏற்றால் இஸ்ரவேலில் கிட்டிய கி.பி 12-ஆம் நூற்றாண்டுத் தடயங்களைக் கைவிட வேண்டும், அதனைப் ஏற்றால் இத்தடயங்களைக் கைவிட வேண்டும். சிலர் சீனாயின் ஆதாரங்களை ஏற்று கி.பி 2500 அன்று யாத்திராகமம் நடந்திருக்க வேண்டும் என குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதனைத் தவிர இன்னும் ஆதாரங்கள் கிடைக்கின்றன, ஆனால் எல்லாமே ஒவ்வொரு காலத்தைச் சேர்ந்திருப்பதால் யாத்திராகமத்தை உறுதி செய்ய இயலாமல் அகழ்வாராய்ச்சி தத்தளித்து வருகிறது, இதனையே பின்கல்ஸ்டீன் சொன்னார்.

இதற்குத் தீர்வு என்ன?

அகழ்வாராய்ச்சிக்கு ஏற்றபடி பைபிளை விளக்குவதை கைவிட்டு பைபிளுக்கு ஏற்றவாறு அகழ்வாராய்ச்சி தடயங்களைத் தேட வேண்டும். பைபிளே யாத்திராகமம் எப்பொழுது நடந்தது என்பதற்கு தெளிவான கால விவரங்களைத் தருகிறது, அக்காலத்தை நாம் ஆராய்ந்தால், யாத்திராகமத்தின் உண்மை நமக்குத் தெரியவரும், அதனைக் குறித்து இனி காணலாம்.

விடுதலைப் பயணம் நடைபெற்ற காலம்:

பைபிள் படி யாத்திராகமம் கி.மு 1250 அன்று நடைபெறவில்லை. இக்காலத்தில் ஆதாரங்களைத் தேடி வருவது முதல் தவறு. எனவே, சிலர் பைபிள்படியே காலத்தைத் தீர்மானிக்கலாம் என ஒரு வசனத்தை முன்வைக்கின்றனர், அது கீழே,

1 இராஜாக்கள் 6:1 - இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின் மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான்.

சாலமோன் அரசாட்சி கி.மு 970 அன்று தொடங்கியது என சரித்திரத்தில் 99.999% ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, மேற்கண்ட வசனத்தின் படி அவர் ஆலயத்தைக் கட்டத் தொடங்கியது கி.மு 966 என்று கணக்காகிறது. விடுதலைப் பயணம் நிகழ்ந்து 480 வருஷம் கழித்து சாலமோன் இவ்வேலையைத் தொடங்கினார் என்ற குறிப்புப்படி விடுதலை பயணம் நிகழ்ந்தது கி.மு 1446 என்று கணிக்கலாம். நன்றாக கவனியுங்கள், வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்கும் கி.மு 1250 என்ற காலத்தை விட பைபிள் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் அதிகமாகக் கூறுகிறது. பைபிள் சொல்கின்ற காலத்தில் ஆதாரங்களைத் தேடாமல் நம் இஷ்டத்திற்கு தேடினால் எப்படி தடயங்கள் கிட்டும்?

எனவே, கி.மு 1446 என்ற கால அளவில் ஆதாரங்களைத் தேட வேண்டும் என நினைக்கிறீர்களா? அது தான் இல்லை. கி.மு 1446 என்ற ஆண்டும் தவறு, விடுதலைப் பயணம் அப்போது நடைப்பெறவில்லை. தொடர்ந்து படிக்கவும்.

எகிப்தில் இருந்து இஸ்ரவேல் புத்திரர் கிளம்பினது முதல் சாலமோன் தேவாலயத்தைக் கட்டத் தொடங்கின வரை நாம் இடைப்பட்ட காலங்களைக் கணித்தால் 480 ஆண்டுகள் வரவில்லை, 574 ஆண்டுகள் வருகின்றன. எப்படி என காணலாம்,

அப்போஸ்தலர் 13: 17-21 - இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்து கொண்டு, எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த போது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி, நாற்பது வருஷ காலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து, கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக் கொடுத்து, பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசி வரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்தி வந்தார். அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பது வருஷ காலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.

1 இராஜாக்கள் 2:11 - தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்.

மேற்கண்ட வசனங்கள் படி, எகிப்தில் இருந்து இஸ்ரவேலர்கள் கிளம்பின பின்பு,

அ) வானாந்திரத்தில் இஸ்ரவேலர் சுற்றித் திரிந்த காலம் 40 ஆண்டுகள்

ஆ) நியாயாதிபதிகள் இஸ்ரவேலை வழிநடத்திய‌ காலம் 450 ஆண்டுகள்

இ) சவுல் இஸ்ரவேலை அரசாண்ட காலம் 40 ஆண்டுகள்

ஈ) தாவீது இஸ்ரவேலை அரசாண்ட காலம் 40 ஆண்டுகள்

உ) சாலமோன் தேவாலயத்தைக் கட்டும் வரை 4 ஆண்டுகள்

மொத்தமாக எல்லவற்றையும் கூட்டினால், 40 + 450 + 40 + 40 + 4 = 574 ஆண்டுகள்!


ஆனால் 1 இராஜாக்கள் 6:1 விடுதலை பயணத்திற்கும் முதல் தேவாலயத்திற்கும் இடைப்பட்ட காலமாக 480 ஆண்டுகள் தான் உள்ளதாக கூறுகிறது, உண்மையில் 480 ஆண்டுகள் அல்ல, 574 ஆண்டுகள் வரை உள்ளது!

அப்படியென்றால் 1 இராஜாக்கள் 6:1 தவறா? அப்படி இல்லை, சுபகாரியங்களைக் குறிப்பதற்காக‌ நல்ல வேளைகளை மட்டுமே கணக்கில் சேர்த்துக் கொண்டார்கள். விடுதலை பயணமும் முதல் தேவாலய திருப்பணியும் இஸ்ரவேலர்களால் மறக்க முடியாத இனிய நினைவுகள் என்பது நாம் அறிந்ததே.

The 480 years of 1 Kings 6:1 being the sum of the periods enumerated, omitting the six servitudes, the usurpation, and the two concurrent judgeships.

The Romance of Bible Chronology (1913),PERIOD II - THE THEOCRACY - Comparative Chronology: Moses to Samuel, The 480 years of 1 Kings 6:1, MARTIN ANSTEY, B.D., M.A.

தமிழாக்கம்: 1 இராஜாக்கள் 6:1 தொகுத்துக் கூறும் 480 ஆண்டுகளில், அடிமைப்பட்டிருந்த ஆறு காலங்களும், போர்க் காலமும், ஒருமித்து ஆண்ட இரு நியாயாதிபதிகளின் காலமும் விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் தான் விடுதலை பயணம் நிகழ்ந்தது கி.மு 1250 அல்லது கி.மு 1446 என்ற ஆண்டுகளாக இருக்க முடியாது என கண்டோம்.

மேலே நாம் கண்ட 574 ஆண்டுகள் இடைவெளிப்படி விடுதலைப் பயணம் நிகழ்ந்தது கி.மு 1540 என்று கணக்காகிறது. ஆனால் இதுவும் ஒரு கணிப்பு தான். ஏனெனில் பைபிள் காலங்களைக் குறிப்பிடும் போது 40, 450 என ஒரு ரவுண்டாகச் சொல்கிறது. அதோடு "ஏறக்குறைய" என்ற வார்த்தையை அப்போஸ்தலர் 13:20 பயன்படுத்தியுள்ளதைக் காணவும்,

அப்போஸ்தலர் 13:20 - பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷ காலமாய் சாமுவேல் தீர்க்கதரிசி வரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.

எனவே விடுதலைப் பயணத்திற்கும் முதல் தேவாலயத்தின் திருப்பணிக்கும் இடையே 574 ஆண்டுகள் உள்ளன என கூறுவதை விட 549 - 599 ஆண்டுகள் உள்ளன என கூறுவது தகும். அதன் படி, கி.மு 1516 - 1566 என்ற காலத்தில் விடுதலைப் பயணம் நிகழ்ந்திருக்கிறது என கூறலாம். இவ்வாறு விடுதலைப் பயணத்தின் காலத்தை நம்மால் பைபிளைக் கொண்டு எளிதாக வரையறுக்க முடியும்.

இனி கி.மு 16ஆம் நூற்றாண்டில் (கி.மு 1500 - 1600) எகிப்தின் சூழல் எப்படியிருந்தது என காணலாம். அதற்கு முன்பு பைபிளில் இருந்து முதலில் செய்திகளைத் திரட்டுவதும் அவசியம்.

பைபிள் சொல்கின்ற சூழல்:

யாத்திராகமம் 1:6,8 - யோசேப்பும் அவனுடைய சகோதரர் யாவரும், அந்தத் தலைமுறையார் எல்லாரும் மரணம் அடைந்தார்கள். யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.

யாத்திராகமம் 4:19 - பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத் தேடின மனிதர் எல்லாரும் இறந்து போனார்கள் என்றார்.

மேற்கண்ட வசனங்கள் படி மூன்று பாரோக்கள் பைபிளில் காணப்படுகின்றனர்.

1) யாக்கோபின் குடும்பத்தை ஆதரித்த யோசேப்புக் கால பார்வோன்.

2) யோசேப்பை அறியாத புதிய பார்வோன். இவன் காலத்தில் தான் மோசே பிறந்தார், பின்பு அவர் எகிப்தியனைக் கொன்ற விஷயம் தெரிந்ததும் பார்வோன் அவரைக் கொல்லத் தேடினான். அதனால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மோசே மீதியானுக்கு ஓடி விட்டார்.

3) கர்த்தர் மோசேயை மீதியானில் இருந்து எகிப்துக்கு அனுப்பும் போது, அவரைக் கொல்லத் தேடின மனிதர் எல்லாம் மடிந்து விட்டார்கள் என்கிறார். அதாவது இப்போது வேறொரு பாரோ பட்டத்திற்கு வந்திருக்கிறான் என இவ்வசனம் சொல்கிறது.

இம்மூன்று பாரோக்களைப் பற்றி தான் நாம் ஆராய போகிறோம்.

அ) யோசேப்புக் கால பார்வோன்:

பஞ்சத்தின் கொடுமை தாங்காமல் யாக்கோபின் குடும்பம் யோசேப்போடு வாழ எகிப்துக்கு வந்தது. யோசேப்பு எகிப்தில் அமைச்சராக பணியாற்றி வந்தார் என்பது நாம் அறிந்ததே. எனவே, யோசேப்பு கேட்டுக் கொண்டதன் நிமித்தம் பார்வோன் யாக்கோபு குடும்பத்தை நன்றாக ஆதரித்தான். அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தான், யாக்கோபு குடும்பத்தினரும் அவனால் மிகவும் இன்பமாக எகிப்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வாழ்ந்த இடமான ராமசேஸ் (ஆதியாகமம் 47:11) வட எகிப்தின் பாசனப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பட்டணமாகும், நாம் வரலாற்றை ஆராய்ந்தால், பைபிள் சொல்வது போல‌ இதே வேளையில் (கி.மு 18, 17 நூற்றாண்டுகள்) கிழக்கத்திய பகுதிகளில் இருந்து எகிப்திற்கு செமித்தியர்கள் வந்தனர், அவர்கள் வட எகிப்தில் மிகுதியாக குடியேறினர், எகிப்தின் அரசவையில் மந்திரிகள் ஆதிக்கம் மிகுந்து விளங்கியது என அறியலாம்,

Large numbers of private monuments document the prosperity of the official classes, and a proliferation of titles is evidence of their continued expansion. In government the vizier assumed prime importance, and a single family held the office for much of a century.....Immigration from Asia is known in the late 12th dynasty and became more widespread in the 13th. From the late 18th century bc the northeastern Nile River delta was settled by successive waves of peoples from Palestine, who retained their own material culture.

Source: Encyclopedia Britannica - Ancient Egypt - 13th Dynasty

தமிழாக்கம்: பல தரப்பட்ட கட்டிடங்கள், அரசு அதிகாரிகளின் செல்வாக்கை சுட்டிக் காட்டுகிறது, அவர்கள் பட்டப்பெயர்கள் பிரபலமாய் இருந்ததே அவர்களது தொடர் வளர்ச்சிக்கு ஆதாரமாக தெரிகிறது, அரசாட்சியில் அமைச்சர் முக்கியமாக விளங்கியுள்ளார், ஒரு குடும்பம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆதிக்கத்தில் இருந்துள்ளது .... 12ஆம் வம்சத்தின் பிற்பகுதியில் ஆசியாவில் இருந்து மக்கள் வந்திருக்கின்றனர், 13ஆம் வம்சத்தில் அவர்கள் மிகுதியாக பரவி விட்டனர். கி.மு 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நைல் நதியின் பாசனப்பகுதியில் பாலஸ்தீனத்தில் இருந்து வந்த தொடர் மக்கள் கூட்டம் குடி அமர்ந்தது, அவர்கள் தங்கள் கலாச்சாரத்தை பேணிக் கொண்டனர்.

மேற்கண்ட செய்திகள் படி, ஆசியாவில் இருந்து மக்கள் மிகுதியாக வந்துள்ளனர். பாலஸ்தீனத்தில் இருந்தும் மக்கள் கூட்டம் தொடர்ச்சியாக வந்துள்ளது. இது கி.மு 18ஆம் நூற்றாண்டே ஆரம்பித்துவிட்டது. அவ்வாறு வந்தவர்கள் எகிப்தின் நைல் நதி டெல்டா பகுதியில் குடி அமர்ந்தனர். அவ்வேளையில் அமைச்சர்களின் செல்வாக்கும் அதிகமாக இருந்துள்ளது, அதில் ஒருவர் குடும்பம் ஆதிக்கத்தில் பல ஆண்டுகள் இருந்துள்ளது. இவைகளைக் கணக்கில் கொண்டால் அக்காலத்தில் எபிரேயர்கள் எகிப்துக்கு குடிபெயர்ந்தனர் என்பதை தாராளமாக ஏற்கலாம். யோசேப்பின் கதை ஆராய்வதற்கு சுவரசியமானது, இருந்தாலும் இப்பதிவு விடுதலை பயணத்தைக் குறித்து இருப்பதால் நாம் தலைப்பிற்கேற்றவாறு தொடர்ந்து செல்லலாம். யோசேப்பு காலத்தில் எபிரேயர்கள் எகிப்தில் குடி அமர்ந்ததைப் பற்றி தனி கட்டுரையில் இன்னும் விளக்கமாக காணலாம்.

ஆ) யோசேப்பை அறியாத புதிய ராஜன்:

மேலுள்ள செய்திகளுக்குப் பின்பு, பைபிள் நன்றாக இன்ட்ரோ கொடுக்கிறது, கவனிக்கவும்,

யாத்திராகமம் 1:6-11 - யோசேப்பும் அவனுடைய சகோதரர் யாவரும், அந்தத் தலைமுறையார் எல்லாரும் மரணம் அடைந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது. யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான். அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள். அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம் பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகாதபடிக்கும், நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான். அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.

மேற்கண்ட வசனங்கள் படி, புதிய பாரோ தன் அடையாளத்தைத் தெளிவாகச் சொல்கிறான்.

1) அவன் யோசேப்பை அறியவில்லை. இஸ்ரவேலர்கள் நம்மை விட அதிகாமாயிருக்கிறார்கள் என்கிறான், யுத்தம் உண்டானால் அவர்கள் எதிரிகளோடு சேர்ந்துவிடுவார்களோ என அஞ்சுகிறான்.

2) எனவே, அவர்களை ஒடுக்க ராமசேஸ் பித்தோம் என்கிற இடங்களில் பட்டணங்களைக் கட்டும் வேலைகளால் ஒடுக்க முயன்றான். யோசேப்பு கால ராஜன் ராமசேஸில் தான் யாக்கோபு குடும்பத்தை குடி அமர்த்தினான் என ஏற்கனவே கண்டோம். இப்போது அதே இடத்தில் ஒரு பட்டணம் கட்ட, புதிய ராஜன் அவர்களைக் கொண்டு வேலை வாங்குகிறான்.

இது அத்தனையும் அப்படியே சரித்திரத்தில் பொருந்துகிறது.

கி.மு 18-ஆம் நூற்றாண்டு முதலே செமித்தியர்கள் (பல தரப்பட்ட ஆசிய மக்கள்) எகிப்தில் குடி புகுந்து வந்ததாக கண்டோம். அதில் ஒரு கூட்டம் காலப்போக்கில் பலத்து, அரசாட்சியையே கைப்பற்றிவிட்டது! அவர்கள் அரசியல் காரணத்திற்காக ஒன்றிணைந்த ஹைக்ஸோஸ் என்ற கலப்பின மக்கள். எகிப்தியர்களைப் போல தங்களை காட்டிக் கொண்டு நாடை ஆண்டனர், ஆனால் முழு எகிப்தும் இவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை, மாறாக வட எகிப்தை மட்டும் கைப்பற்றினார்கள். அவ்வாறு கைப்பற்றியதும் அவாரிஸ் என்கிற நகரை தங்கள் தலைநகரமாக அறிவித்தனர்! இந்த அவாரிஸ் பட்டணம் அமைந்துள்ள இடம் தான் பைபிள் கூறும் ராமசேஸ்!

உண்மையான எகிப்தியர்களாக இருந்தால் இஸ்ரவேலர்கள் நம்மை விட அதிகமாயிருக்கிறார்களே என அஞ்ச தேவையில்லை. எதிரிகளோடு இணைவார்களோ எனவும் அஞ்சத் தேவையில்லை. எனவே, யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஹைக்சோஸ் இன மன்னன் என்பதில் சந்தேகமில்லை. ஹைக்சோஸ்கள் அவாரிஸ் பட்டணத்தைக் கட்டியதும் இதற்கு சான்றாக நிற்கிறது. கீழே ஒரு குறிப்பைக் காணலாம்,

Hyksos, group of mixed Semitic-Asiatics who immigrated into Egypt’s delta region and gradually settled there during the 18th century bce. Beginning about 1630, a series of Hyksos kings ruled northern Egypt as the 15th dynasty.....At Avaris (modern Tall al-Dabʿa) in the northeastern delta, they built their capital with a fortified camp over the remains of a Middle Kingdom town. Excavations since the 1960s have revealed a Canaanite-style temple, Palestinian-type burials, including horse burials, Palestinian types of pottery......

Source: Encyclopedia Britannica - Hyksos

தமிழாக்கம்: ஹைக்சோஸ் என்பவர்கள் ஒரு செமித்திய கலப்பின மக்கள் குழு, இவர்கள் கி.மு 18-ஆம் நூற்றாண்டில் எகிப்தின் டெல்டா பகுதிக்குள் பெயர்ந்து அங்கே மெதுவாக குடி அமர்ந்தனர். ஏறக்குறைய கி.மு 1630 முதல் தொடர்ச்சியாக பல ஹைக்சோஸ் மன்னர்கள் வட எகிப்தை 15-ஆவது சாம்ராஜ்ஜியமாக அரசாண்டார்கள். வடகிழக்கு டெல்டா பகுதியில் அமைந்துள்ள அவாரிஸில் (தற்போதைய டெல் எல்தபா) இவர்கள் தங்கள் தலைநகரைக் கட்டினார்கள், அப்பகுதியில் ஏற்கனவே இருந்த மத்திய அரசாட்சி நகரின் கட்டிடங்களோடு தங்களுக்காக ஒரு முகாமையும் கட்டினார்கள். கி.பி 1960 ஆண்டிலிருந்து இங்கு நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியால் தெரிய வந்தவை கானானிய வடிவில் அமைக்கப்பட்ட ஒரு கோவிலும், குதிரை புதைப்புகள் உட்பட‌ பாலஸ்தீனாவில் விளங்கிய அடக்க முறைகளும், பாலஸ்தீன மட்பாண்டங்களும்....

இனி, அவாரிஸே ராமசேஸ் பட்டணம் என்பதற்கான சான்றுகளைக் காணலாம்,

Per Ramessu, also called Pi Ramesse, biblical Raamses, modern Qantīr, including the site of Tall al-Dabʿa, ancient Egyptian capital in the 15th....

Source: Encyclopedia Britannica - Per Ramessu

தமிழாக்கம்: பெர் ராமெசு, பை ராமசே என்றும் அழைக்கப்படுகிறது, இதுவே பைபிள் கூறும் ராமசேஸ், டெல் எல்தபாவை உள்ளடக்கிய தற்போதைய குவாண்திர், பண்டைய எகிப்தின் 15ஆம் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரம்....

தற்போது அவாரிசே பைபிள் கூறுகின்ற ராமசேஸ் பட்டணம் என்பதில் சந்தேகமில்லை, பைபிள் கூறுகின்ற யோசேப்பை அறியாத புதிய‌ ராஜன் ஒரு ஹைக்சோஸே என அறியலாம்.

சிப்பிராள் குறித்த குறிப்பு:

புதிய‌ ராஜனைப் பற்றி பைபிளில் அவ்வளவாக செய்தி இல்லை. இருந்தாலும் அவன் சிப்பிராள், பூவாள் என இரண்டு எபிரேய மருத்துவச்சிகளை அழைத்து குழந்தைகளைக் கொல்லச் சொல்லி கட்டளையிட்டதாக பைபிள் கூறுகிறது, அவ்வசனத்தைக் காணலாம்,

யாத்திராகமம் 1:15,16,17 - அதுவுமன்றி, எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி: நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும் போது, அவர்கள் மணையின் மேல் உட்கார்ந்திருக்கையில் பார்த்து, ஆண் பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண் பிள்ளையானால் உயிரோடு இருக்கட்டும் என்றான். மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண் பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.

எகிப்தில் கிட்டிய‌ அடிமைகள் குறித்த வரலாற்று குறிப்புகளில் சிப்பிராள் என்ற பெண்ணின் பெயரும் காணப்படுகிறது, அவள் சொபெக்ஹோடெப் என்ற எகிப்திய மன்னன் அரசாண்ட காலத்தைச் சார்ந்தவள் என்பது நமக்கு கிடைக்கின்ற கூடுதல் தகவலாகும். இவனது காலம் கி.மு 1700 என்று கூறப்படுகிறது. ஆனால் இவன் ஹைக்சோஸ் அல்ல, மாறாக எகிப்தின் பாரம்பரிய வம்சத்தைச் மன்னன் தான். ஹைக்சோஸ்களின் காலத்தைக் குறித்து தெளிவில்லை. பொதுவாக கி.மு 1650 - 1550 வரை ஏற்கப்படுகிறது. எனவே சொப்க்ஹோடெப் காலத்தில் சிப்பிராளுக்கு இருபது வயதிருந்தால் ஹைக்சோஸ் காலம் வரும்போது ஏறக்குறைய எழுபது வயதுள்ளவளாக இருக்கிறாள். பைபிள் சிப்பிராளை பிரசவம் பார்க்கின்ற மருத்துவச்சி என்பதால் அவள் வயது முதிர்ந்தவள் என்பதில் சந்தேகம் தேவையில்லை. சிப்பிராளின் பெயர் வருகின்ற எகிப்திய ஓலை புருக்லின் 35.1446 என பெயரிடப்பட்டு நியூயார்க்கில் உள்ள புருக்லின் அருங்காட்சியத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.

ஹைக்சோஸ் ஆட்சியில் நிலவிய இனப்பெருக்கம்:

சிப்பிராள் பூவாளின் முயற்சிக்கு பலனில்லை, ஏனெனில் பிறக்கின்ற ஆண்பிள்ளைகளை நைல் நதியில் எரிந்து கொல்லுமாறு பார்வோன் கட்டளையிட்டதாக பைபிள் சொல்கிறது.

யாத்திராகமம் 1:22 - அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண் பிள்ளைகளை எல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண் பிள்ளைகளை எல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.

ஹைக்சோஸ் காலத்தில் ஜனங்கள் பெருகி இருந்துள்ளார்கள், எனவே, இடத்திற்காக கல்லறைகளில் மக்கள் வாழ்ந்தாககவும், குழந்தைகளைக் பெரிய வீடுகளின் வாசற்படிகளில் புதைக்கும் அவலங்கள் நடைபெற்றதாகவும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே காலத்தில் ஹைக்ஸோஸ்கள் எதிரிகளால் தங்களுக்கு கேடு நிகழுமோ என பயந்து அவாரிஸைச் சுற்றி மதிர் சுவர்களையும் எழுப்பி இருக்கிறார்கள்.

Tell el-Dab’a experienced an increase in immigration during the period 1610-1590 BCE. Between 1590 and 1570 BCE, the population of Tell el-Dab’a faced overcrowding. Due to space restrictions, small houses were built in cemeteries, and children were buried in the doorways of larger houses. Tombs became incorporated into the structure of the houses. During the early Hyksos period, members of lower social classes built their houses around their master’s house. This is not as evident during the later Hyksos Period due to the overcrowding and damage caused by agriculture. The size of the houses of Tell el-Dab’a indicates the affluence of the inhabitants. In the north-east periphery area, the houses were very small, reflecting poorer classes. In contrast, in the eastern area of Tell el-Dab’a, the remains of large houses with stairs leading to upper floors were discovered, indicating that the more wealthy members of the society lived there. Towards the end of the Hyksos period, between 1600 and 1570 BCE, the rulers of Tell el-Dab’a felt threatened by the possibility of attack. They therefore built a thick enclosure wall around the city for defense.

Source: Booth, Charlotte (2005). The Hyksos Period in Egypt. Princes Risborough: Osprey Publishing. ISBN 0-7478-0638-1.

தமிழாக்கம்: டெல் எல்தபாவில் கி.மு 1610 - 1590 காலங்களில் குடி அம‌ர்தல் அதிகரித்து காணப்படுகிறது, 1590 - 1570 இடைவெளிகளில் டெல் எல்தபாவில் ஜனத்தொகை மிகவும் அதிகரித்திருக்கிறது. இட பற்றாக்குறையால் கல்லறைகளில் சிறு வீடுகள் கட்டப்பட்டது, குழந்தைகள் பெரிய வீடுகளின் வாசல்களில் புதைக்கப்பட்டனர். கல்லறைகள் வீடுகளாகி விட்டன. ஹைக்ஸோஸ்களின் ஆரம்ப காலங்களில் சமுதாயத்தின் அடித்தட்ட மக்கள் தங்கள் எஜமானர்களின் வீடுகள் அருகே வீடுகள் அமைத்தனர். ஆனால், மக்கள் தொகை பெருக்கத்தாலும், வேளாண்மையில் ஏற்பட்ட இழப்புகளாலும், இது ஹைக்சோஸ்களின் பிற்காலத்தில் நிகழவில்லை என நிருபனமாகிறது. தெல் எல்தபாவில் உள்ள வீடுகள் அளவில் வித்தயாசப்படுகின்றன, இது மக்களிடையே இருந்த ஏற்றத் தாழ்வுகளைக் காட்டுகிறது. வட கிழக்கு பகுதிகளில் வீடுகள் மிகவும் சிறிதாய் இருக்கின்றன, இதில் வசித்திவர்கள் ஏழை சமுதாயத்தினராக இருக்க வேண்டும். ஆனால், தெல் எல்தபாவின் கிழக்கு பகுதியில் பெரிய வீடுகள் படிக்கட்டுகளோடும் மேல் அடுக்குகளோடும் இருப்பது தெரிகிறது, எனவே, இதில் வசித்தவர்கள் சமுதாயத்தில் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என அறியலாம். ஹைக்சோஸ்களின் இறுதிக் காலத்தில் அதாவது கி.மு 1600 - 1570 ஆண்டுகளில் தெல் எல்தபா அரசர்கள் எதிரிகளால் தாக்குதல் ஏற்படும் என பயந்திருக்கிறர்கள். எனவே, பட்டணத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக மதிற்சுவரையும் எழுப்பியுள்ளார்கள்.

இதில் எச்செய்தி பைபிள் கூறுகின்ற தகவலோடு பொருந்தவில்லை?

Young Moses portrayed in "Bible Series"

இக்காலத்தில் தான் மோசே பிறந்தார். அதன் பின்பு கொலை குற்றத்திற்காக தன் உயிரைக் காக்க மீதியானுக்கு ஓடிபோனார். அச்சமயம் அவருக்கு வயது நாற்பது (அப்போஸ்தலர் 7:23). பின்பு தேவன் அவரைச் சமாதானப்படுத்தி எகிப்துக்கு அனுப்பி வைத்தார். அவனைக் கொல்லத் தேடின மனிதர்கள் இறந்து போனார்கள் என தைரியப்படுத்தினார். அவர் எகிப்துக்கு திரும்பி வந்த போது அவர் வயது 80. நிச்சயமாக இது ஹைக்சோஸின் காலத்தில் அப்படியே பொருந்துகிறது, ஹைக்சோஸ் அரசாளத் தொடங்கி ஒரு முப்பது வருடம் கழித்து மோசே பிறக்கிறார் என நாம் கணக்கிட்டால், அவர் தம் எண்பதாம் வயதில் திரும்பி வரும் போது ஹைக்சோஸ்களின் அரசாட்சிக் காலம் முடிந்துவிட்டது.

Our God in Burning Bush

கீழுள்ள வசனமும் அதனைச் சொல்கின்றது,

யாத்திராகமம் 4:19 - பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத் தேடின மனிதர் எல்லாரும் இறந்து போனார்கள் என்றார்.

எனவே, நாம் ஹைக்சோஸ்களில் காலத்திற்கு பிறகு தோன்றிய பாரோவைக் குறித்து காண ஆரம்பிக்க‌லாம்.

3) மோசேயுடன் தற்கித்த பார்வோன்:

மோசே எகிப்தில் இல்லாத காலத்தில் எகிப்தில் பெரும் போராட்டங்கள் நடந்தன. வட எகிப்தின் பகுதிகளை ஹைக்சோஸ் இன மன்னர்கள் ஆண்டுவந்தது பூர்வீக எகிப்தியர்களுக்கு கசப்பை அளித்தது, எனவே அவர்களோடு போராடி பட்டத்தில் இருந்து இறக்கினர். ஹைக்சோஸ்களின் கட்டுப்பாட்டில் இருந்த வட எகிப்து பகுதிகள் பூர்வீக பாரோக்களின் கட்டுப்பாட்டில் வந்தது, மீண்டும் வட எகிப்தையும் தென் எகிப்தையும் ஒன்றாக இணைத்து அரசாளத் தொடங்கினர். ஹைக்சோஸ்கள் அடிமைகளாக்கப் பட்டனர். இந்த நிகழ்வின் போது பட்டத்திற்கு வந்தது முதலாம் அஹ்மோஸ் என்கிற பூர்வீக பார்வோன். பைபிள்படி, இவனது அரசாட்சியின் போது தான் மோசே எகிப்துக்கு வந்து சேர்ந்தார்.

பைபிளில் இதனைக் மறைமுகமாக அறியலாம்,

யாத்திராகமம் 5:12 - அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடிகளைச் சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்து தேசம் எங்கும் சிதறிப்போனார்கள்.

கவனிக்கவும், மோசே வந்த பிறகு, எகிப்து தேசம் எங்கும் இஸ்ரவேலர்கள் சிதறிப் போனதாக பைபிள் சொல்கிறது, வட எகிப்தும் தென் எகிப்தும் ஒன்றாக மீண்டும் இணைக்கப்பட்டு எகிப்தியர்களால் அரசாளப்படுகிறது என இதனால் அறியலாம்.

அஹ்மோஸ் அரசாண்ட காலமும் தெளிவில்லை. ஆனால் அவன் கி.மு 16 ஆம் நூற்றாண்டில் தான் அரசாண்டிருக்கிறான் என பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, இது நாம் பைபிள்படி விடுதலைப் பயணத்திற்கு என கணித்த அதே காலம், கி.மு 1516 - 1566.

அஹ்மோஸ் ஹைக்சோஸ்களை வீழ்த்திய பின்பும் அவர்கள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக எகிப்திலேயே இருந்துள்ளனர், அவர்களில் பலரை அஹ்மோஸ் தன் சேவகர்களுக்கு அடிமைகளாகவும் கொடுத்திருக்கிறான். பின்பு என்ன நடக்கிறது என நாம் கண்டால், நாட்டை விட்டு போனால் போதும் என்ற அளவிற்கு ஹைக்சோஸ் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த மக்கள் வெளியேற்றம் தான் பைபிள் கூறும் விடுதலை பயணம். ஆனால் இதற்கு மறுப்பு இப்படி வரும், ஹைக்சோஸ் என்பவர்கள் ஒரே இன மக்கள் அல்ல, அவர்கள் பல இனத்தைச் சார்ந்த ஒரு கலப்பின் மக்கள் குழு, அவர்களை ஓரின மக்களான இஸ்ரவேலர்களின் விடுதலை பயணத்தோடு இணைப்பது தவறு. தவறவே அல்ல! எப்படி என காணவும்,

முதலாவது ஹைக்சோஸ் என்பது கலப்பின மக்கள் குழு என்பது இங்கு திட்டமாக ஏற்கப்படுகிறது, கி.மு 18ஆம் நூற்றாண்டில் செமித்தியர்கள் எகிப்தில் ஊடுருவி எகிப்தில் குடி அமர்ந்தனர் என கண்டோம், அதில் இருந்து அரசியல் காரணங்களுக்காக இணைந்த ஒரு கலப்பின மக்கள் குழு வட எகிப்தை கைப்பற்றியது, அவர்களே ஹைக்சோஸ்கள் என அழைக்கப்படுகின்றனர். பைபிள் கூறுகின்ற குறிப்புகள் படி இவர்களே எங்கே இஸ்ரவேலர்கள் பூர்வீக எகிப்தியர்களோடு தங்களுக்கு எதிராக சேர்ந்து விடுவார்களோ என பயந்து அவர்களை ஒடுக்கிய ஜனங்கள். இக்காலத்தில் பிறந்த மோசே கொலை செய்துவிட்டு மீதியானுக்கு ஓடிவிட்டார், அவர் திரும்பி வருவதற்குள் அஹ்மோஸ் ஹைக்சோஸ்களை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றிவிட்டான், வீழ்த்தப்பட்ட ஹைக்சோஸ்களும் இஸ்ரவேலர்களைப் போல‌ அடிமைகளாகி அவர்களோடு கலந்துவிட்டனர், இதற்குப் பின்பு மோசே வருகிறார், மோசே கொடுக்கின்ற துன்பங்களை சகிக்க முடியாமல் பாரோ இஸ்ரவேல் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினான் என பைபிள் கூறுகிறது.

பைபிள் கூறுகின்ற இந்த விடுதலை பயணம் நிகழ்ந்தது கி.மு 1516 - 1566. இதே காலத்தில் தான், அஹ்மோஸும் ஹைக்சோஸ்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினான். செமித்திய மக்கள் பெருந்திரளாக எகிப்தை விட்டு வெளியேறினர். ஆனால், ஹைக்சோஸ்கள் வெளியேற்றத்தை இஸ்ரவேலர்களோடு பொருத்த மறுப்பதற்கு முதல் காரணம் என்னவெனில் ஹைக்சோஸ்கள் இஸ்ரவேலர்களைப் போல ஓரின மக்கள் அல்ல, அரசியல் காரணத்திற்காக ஒன்றிணைந்த பல இனத்தவர்கள் என வரலாறு சொல்கிறது. எனவே, பைபிள் சொல்வது போல இஸ்ரவேலர்களைப் போன்ற‌ ஓரின குழு எகிப்தில் இருந்து வெளியேறியதாக சான்று இல்லை என்கின்றனர். அப்படியல்ல, வெளியேற்றப்பட்ட அந்த கலப்பின மக்களுள் இஸ்ரவேலர்களும் அடங்கியுள்ளனர். பைபிள் இஸ்ரவேலர்கள் மற்றுமே தனித்து எகிப்தை விட்டு வெளியேறியதாக சொல்லவே இல்லை, மாறாக அவர்கள் பிற இன மக்கள் பலரோடு கலந்து தான் வெளியேறினார்கள் என்கிறது. ஹைக்ஸோஸ்களின் வெளியேற்றமும் இஸ்ரவேலரின் விடுதலை பயணமும் ஒன்று தான். கீழுள்ள வசனத்தைக் காணவும்,

யாத்திராகமம் 12:38 - இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம் பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள். அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருக ஜீவன்களும் போயிற்று.

மேற்கண்ட வசனத்தைப் படித்தால் கலப்பின மக்கள்களாக ஒரு பெரிய திரள் கூட்டமே எகிப்தை விட்டு வெளியேறியிருப்பதை நாம் அறியலாம். எகிப்தில் இருந்து அத்தகைய கூட்டம் ஒன்று வெளியேறியிருக்கிறது என்றால் அது ஹைக்சோஸ்களின் வெளியேற்றம் மட்டுமே, பைபிளும் அதே காலத்தைத் தான் கூறுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

மோசே காலத்தில் என்ன நடந்தது என காண தொடர்ந்து நாம் முன் செல்லலாம்,

பத்து வாதைகள்:


கர்த்தர் எகிப்தை கொள்ளை நோய்களாலும், இயற்கை அழிவுகளாலும், பல விதமான வாதைகளாலும் சீரழித்தார் என பைபிள் சொல்கிறது. எகிப்தில் இக்காரியங்கள் நடைபெற்றிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள், ஆனால் அது கடவுளின் வல்லமையால் உண்டானவை என்பதை விட இயற்கை சீற்றத்தால் உண்டாயிருக்க வேண்டும் என்பது இவர்களின் கருத்து. அதாவது கி.மு 1600 - 1625 இடைவெளியில் கிரேக்கு தேசம் அருகே உள்ள சன்டோரினி என்ற எரிமலை வெடித்துச் சிதறியிருக்கிறது, இந்த எரிமலை சீற்றத்தின் தாக்கம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பயங்கரமாக இருந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள், வானில் கலந்த புகையால் சுற்றுச்சூழல் மிகுதியாக பாதிக்கப்பட்டிருக்கிறது, இதனால் ஏகப்பட்ட கொள்ளை நோய்கள், நிலநடுக்கங்கள், சுனாமிகள் நிகழ்ந்திருக்கின்றன. கிழக்கத்திய நாடுகளெல்லாம் இதனைக் கண்டு மிரண்டு போய்விட்ட‌ன. ஆனால் இன்று வரை இது சரித்திர ஆய்வாளர்களாலும் புவியியல் வல்லுனர்களாலும் முரண்படுகின்றன ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.

ஏனெனில் சரித்திர தடயங்கள் என நாம் கண்டால், 16ஆம் நூற்றாண்டில் (கி.மு 1500 - 1600) வாழ்ந்த மக்களே இதனைக் கண்டு மிரண்டு போய் தங்கள் சாட்சிகளை எழுதி வைத்துள்ளனர். இவ்வாறு அகழ்வாராய்ச்சி தடயங்கள் எல்லாம் கி.மு 16ஆம் நூற்றாண்டையே சன்டோரினி சீற்றத்திற்கு உரிய‌ காலமாக‌ சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் ரேடியோ கார்பன் டேட்டிங் முடிவுகள் எல்லாம் கி.மு 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியை (கி.மு 1600 - 1625) சுட்டிக் காட்டுகின்றன. சரித்திர ஆய்வாளர்கள், மக்கள் எழுதிய குறிப்புகளையே கணக்கில் கொள்ள முடியும் என விடாபிடியாக உள்ளனர், புவியியல் வல்லுநர்களோ ரேடியோ கார்பன் டேடிங் முடிவுகளையே ஏற்றுக் கொள்ள முடியும் என விடாபிடியாக உள்ளனர். இதனால் எகிப்து ஆராய்ச்சியில் குறைந்தது 30 ஆண்டுகள் இடிக்கிறது. ஏனெனில் ஹைக்சோஸ்களின் ஆட்சி முடிவிலும் அஹ்மோஸின் ஆட்சி துவக்கத்திலும் தான் இயற்கை பேரழிவுகள் உண்டானதாக எகிப்தியல் தடயங்களில் சொல்லப்பட்டுள்ளது. சன்டோரினி எரிமலை சாம்பல் துகள்கள் தெல் எல்தபாவில் மிகுதியாக கிடைக்கின்றன. முதலாம் அஹ்மோஸும் இந்த இயற்கை அழிவை எழுதி வைத்துள்ளான். அஹ்மோஸின் அரசாட்சிக் காலமாக கி.மு 1570 முதல் 1545 வரை சரித்திர ஆய்வாளர்கள் ஏற்கின்றனர். புவியியல் வல்லுநர்கள் கி.மு 1600 - 1625 காலத்தைத் தான் சன்டோரினி வெடிப்புக்கு ஏற்போம் என உறுதியாக உள்ளனர். எனவே, இன்று வரை சரித்திர ஆய்வாளர்களுக்கும் புவியியல் வல்லுநர்களுக்கும் இந்த விஷயத்தில் பெரிய வாக்குவாதம் உள்ளது, ஆனால் நமக்குத் தெரிய வருகின்ற தகவல் என்னவெனில் நைல் நதி, வானிலை, கால் நடைகள், வேளாண்மை என ஒன்று விடாமல் இக்காலத்தில் எகிப்து தேசத்தில் சீரழிந்திருக்கிறது. பைபிளில் காணப்படும் அத்தனை வாதைகளும் அஹ்மோஸின் காலத்தில் நடந்திருப்பதாக ஆய்வாளார்கள் ஒத்துக் கொள்கின்றனர். சைன்ஸ் டெய்லி, டெலகிராப், பி.பி.சி, பப்மெட், நியூயார்க் டைம்ஸ் என எல்லா பெயர்பெற்ற தளங்களும் இதனைச் சொல்கின்றன. கீழே உள்ள முகவரிகளில் சிலவற்றைக் காணலாம்,

1) Six medical papyri describe the effects of Santorini's volcanic ash, and provide Egyptian parallels to the so-called biblical plagues.

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16513290

2) Treatments for burns in the London Medical Papyrus show the first seven biblical plagues of Egypt are coherent with Santorini's volcanic fallout.

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16226847

3) Medical papyri show the effects of the Santorini eruption heavily influenced the development of ancient medicine.

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/22649871

4) Ancient Egyptian doctors and the nature of the biblical plagues.

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16002225

5) Ancient stormy weather: World's oldest weather report could revise bronze age chronology

http://www.sciencedaily.com/releases/2014/04/140401172908.htm

6) Biblical plagues and parting of Red Sea 'caused by volcano'

http://www.telegraph.co.uk/science/science-news/3301214/Biblical-plagues-and-parting-of-Red-Sea-caused-by-volcano.html

அறிவியல் அறிஞர்கள் பைபிள் கூறும் பத்து வாதைகளையும், சமுத்திரம் பிளந்ததையும் இயற்கை சீற்றங்களை வைத்து அழகாக விளக்குகின்றனர், ஆனால் எல்லாவற்றையும் முடித்துவிட்டு அவர்கள் தரும் முடிவுரை, "பைபிள் கூறும் வாதைகளை எல்லாம் இயற்கையை வைத்தே விளக்க முடிகிறது, இதில் கடவுளின் ஆற்றல் ஒன்றுமில்லை" என்பதாகும். இல்லை, பைபிள் தெளிவாக அற்புதங்களையும் கூறுகிறது.

யாத்திராகமம் 14:22 - இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலது புறத்திலும் அவர்கள் இடது புறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.

யாத்திராகமம் 10:23 - மூன்று நாள் மட்டும் ஒருவரையொருவர் காணவுமில்லை, ஒருவரும் தம்மிடத்தை விட்டு எழுந்து இருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கும் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சமிருந்தது.

அறிவியல் விளக்கப்படி சமுத்திரம் அழகாக பிரிந்தது போல கூறுகின்றனர், ஆனால் பைபிள் இஸ்ரவேலர்களுக்கு இருபுறமும் மதில்களைப் போல நீர் நின்றது என்கிறது, எகிப்தில் இருள் சூழ்ந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக் கொள்கின்றனர், ஆனால் பைபிள் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் வெளிச்சம் கொடுக்கப்பட்டதாக கூறுகிறது, நாம் நம்புவதும் நம்பாததும் வேறு விஷயம், ஆனால் மேற்கண்ட வசனங்களை எல்லாம் அறிவியலோடு கண்டபடி பொருத்தக் கூடாது. அதோடு ஆய்வாளர்கள் கூறுகின்ற இயற்கை விளக்கங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், சரியான நேரத்தில் அது எப்படி நடந்தது? இயற்கையைக் கட்டுப்படுத்துவது யார்?

An Israelite painting the lamb's blood at his doorpost

அஹ்மோஸ் "டெம்பஸ்ட் ஸ்டீல்" என்கிற கல்வெட்டில் தன் அனுபவத்தைக் கூறியுள்ளான், இக்கல்வெட்டு பெரிதளிவில் சிதைந்துவிட்டது, மிஞ்சியுள்ள பகுதிகளைக் காணலாம்,

...The gods (made?) the sky come with a tempest of (rain?); it caused darkness in the Western region; the sky was unleashed, without.....more than the roar of the crowd...was powerful...on the mountains more than the turbulence of the cataract which is at Elephantine. Each house...each shelter (or each covered place) that they reached....were floating in the water like the barks of papyrus (on the outside?) of the royal residence for...day(s)..

A Storm in Egypt during the Reign of Ahmose, Description, translation of the stele.

தமிழாக்கம்: கடவுள்கள் ஆகாயத்தை புயலலோடு கூடிய (மழையாய் மாற்றிவிட்டனர்?)"; அதனால் மேற்கு புறமெல்லாம் இருளானது, வானம் கட்டவிழ்க்கப்பட்டது, அதோடில்லாமல்.... மக்கள் கூட்டத்தின் பெருஞ்சத்தத்தை விட...பலமாய் இருந்தது... எலிபேன்டைனின் மலைகளின் மேல் கொந்தளிப்போடு கூடிய அந்த பலத்த மழையை விட.... ஒவ்வொரு வீடும்.... அவர்கள் அணுகிய ஒவ்வொரு தங்குமிடமும் (அல்லது கூடாரமும்).... அரண்மனை (வெளியே?) தண்ணீரில் மிதக்கின்ற பாப்பிரஸ் நார்களைப் போல...நாட்களாக....

நிச்சயமாக அஹ்மோஸின் அரசாட்சியில் எகிப்து இயற்கை சீற்றத்தால் சீரழிந்தது என சந்தேகமில்லை, அவனும் அதைக் கடவுளின் செயல்களாகத் தான் நம்புகிறான், அஹ்மோஸ் எகிப்தியன் என்பதால் அவனது நம்பிக்கை படி கடவுள் ஒருவர் அல்ல, அதனால் கடவுள்கள் என்கிறான், பைபிளின் பாரோ கூட அவ்வாறே நடந்தான்.

யாத்திராகமம் 5:2 - அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்.

அதனால் கர்த்தர் மேற்கண்டவாறு எகிப்தை சீரழித்தார் என காணலாம், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூட எகிப்து 16ஆம் நூற்றாண்டில் சீரழிந்ததை ஏற்கின்றனர்.

சேஷ்ட புத்திரனின் இறப்பு:


யாத்திராகமம் 4:22,23 - அப்பொழுது நீ பார்வோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்ட புத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.

அஹ்மோஸின் முதல் குமாரன் சியாமுன், இவன் தன் 12ஆம் வயதில் இறந்திருக்கிறான்... இது ஹைக்சோஸ்கள் வெளியேற்றத்திற்கு முன்பு நடந்திருக்கிறது...!

விடுதலைப் பயணம்:


இந்தளவு தேவ கோபாக்கினையை பெற்ற பார்வோன், "தன் தேசத்தை விட்டு இவர்கள் போனால் போதும்" என்ற நிலைக்கு வந்து இறுதியில் இஸ்ரவேலர்களை அனுப்பி விட்டான் என பைபிள் கூறுகிறது. ஹைக்சோஸ்களின் வெளியேற்றமும் இதே போல காணப்படுக்கிறது, ஹைக்சோஸ்களை வலுக்கட்டாயமாக போகச் சொல்லி துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.

பின்பு, மனமாறிய பார்வோன் இஸ்ரவேலர்களை மீண்டும் அடிமைப்படுத்தி துன்பப்படுத்துவதற்காக தொடர்ந்து இராணுவத்தோடு வந்துவிட்டான் என பைபிள் சொல்கிறது. ஹைக்சோஸ்களின் வெளியேற்றத்திலும் அஹ்மோஸ் இரதங்களோடு வந்துவிட்டான, இஸ்ரவேலர்கள் பார்வோனைக் கண்டு பதறியதைப் போல, ஹைக்ஸோஸ்களும் பதற்றத்தோடு சிதறி அடித்து ஓடி இருக்கின்றனர்.

Moses parts the sea

கர்த்தர் பார்வோனிடம் இருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்றி கரை சேர்த்தார் எனவும், எகிப்தின் சேனைகளால் எல்லாம் கடலில் அழிந்தன எனவும் அறிந்திருக்கிறோம். தெல் எல்தபாவில் ஏகப்பட்ட படைவீரர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இவர்கள் அனைவரும் கி.மு 16ஆம் நூற்றாண்டில் இறந்தவர்கள் எனவும் போர் காரணத்தால் இறந்த வீரர்கள் தான் இவர்கள் எல்லாம் என அதனை ஆராய்ந்த ஆய்வாளர் ஒப்புக் கொள்கிறார். ஆனால், நோய்களால் அவர்கள் இருந்திருக்கலாம் என அவர் கூறுகிறார் என்பதையும் தெரிவித்து விடுகிறேன். நீங்கள் உங்கள் விருப்பப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.

Anthropological examination has shown that some of the individuals were Nubians, commonly employed in the Egyptian army in this time period. Since the burials were in the area of a military camp and arrowheads were found in the graves, the most logical explanation is that the burials were soldiers from the Egyptian army.

Source: The Tuthmoside Stronghold of Perunefer. Egyptian Archaeology 26: 13–17. Bietak 2005: 13.

தமிழாக்கம்: மனித இன ஆய்வுகள் அவர்களில் சிலர் நுபியர்கள் என காட்டுகிறது, இவர்கள் எகிப்து இராணுவத்தில் அவ்வேளையில் இயல்பாக பணி வகித்தவர்கள் தான். இராணுவ முகாம்களை ஒட்டி புதைக்கப்பட்டு இருப்பதாலும், அவர்களது பிரேத குழிகளில் அம்புகள் இருப்பதாலும், இந்த சடலங்கள் எல்லாம் எகிப்தின் இராணுவ வீரர்களுடையது என்பதே பொருத்தமான விளக்கமாகும்.

இறுதியில் ஹைக்சோஸ்கள் பாலஸ்தீனத்திற்கு தப்பிவிட்டதாக எகிப்தின் தடயங்கள் சொல்கின்றன, இதனை சொல்லிக் காட்ட தேவையில்லை, இஸ்ரவேலர்கள் இறுதியாக போய்ச் சேர்ந்த இடமும் அதுதான்!

இக்கட்டுரை விடுதலைப் பயணத்தோடு தொடர்புடைய செய்திகளை மட்டுமே குறிக்கும் நோக்கில் எழுதப்பட்டதால் இதோடு நிறைவு செய்கிறேன், விடுதலை பயணத்திற்கு பின்பு நடந்த வனாந்திர வாழ்க்கை, யோசுவா தலைமையிலான போர் என எல்லாவற்றையும் தனிக் கட்டுரைகளில் காணலாம், இதுவரை சொன்னதே உங்களால் நம்ப முடியாமல் இருந்திருக்கும், இதனையும் கேளுங்கள், எரிகோ பட்டணத்தில் மிகப்பெரிய சுவர் ஒன்று இடிந்து புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இஸ்ரவேலர்களை வழிநடத்தி வந்த கர்த்தர் எரிகோ மதிலை தகர்த்ததாக கூறும் அதே நேரத்தில் (கி.மு 1500 - 1550) தான் இச்சுவர் இடிந்திருக்கிறது! விரைவில் அதனையும் காணலாம்....!